தொழிலாளர் நல நிதி பங்கு தொகை இணைய வழியில் செலுத்த வசதி
சென்னை:நடப்பாண்டிற்கான தொழிலாளர் நல நிதி பங்கு தொகையை, lwmis.lwb.tn.gov.inஎன்ற, வாரியத்தின் இணையதளத்தில் செலுத்தலாம். இது குறித்து, தமிழ்நாடு தொழிலாளர் நல வாரிய செயலர் வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு தொழிலாளர் நல நிதி சட்டத்தின்படி, தொழிற்சாலைகள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள் உள்ளிட்ட, அனைத்து நிறுவனங்களிலும், ஆண்டில் 30 நாட்களுக்கு மேல் பணி புரிந்த தொழிலாளர்களுக்கு, தொழிலாளர் நல நிதி பங்குத் தொகை செலுத்த வேண்டும். தொழிலாளியின் பங்காக 20 ரூபாய் மற்றும் நிறுவனத்தின் பங்காக 40 ரூபாய் என, ஆண்டுதோறும் 60 ரூபாய் செலுத்த வேண்டும். அதன்படி, நடப்பாண்டிற்கான தொழிலாளர் நல நிதி பங்கு தொகையை, டிச., மாத ஊதியத்தில் பிடித்தம் செய்து, இவ்வாரியத்திற்கு அடுத்த ஆண்டு ஜன., 31க்குள் செலுத்த வேண்டும். நிறுவனங்கள் lwmis.lwb.tn.gov.inஎன்ற, வாரிய இணையதளத்தில் பதிவு செய்து, தொழிலாளர் நல நிதியை இணையதளம் வாயிலாக செலுத்தலாம். ஏற்கனவே, பதிவு செய்துள்ள நிறுவனங்களும் இதே இணையதளத்தில் நிதியை செலுத்தலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.