அப்பாஸ் கல்சுரல்ஸ் மெல்லிசை பாடல்களுக்கு ரசிகர்கள் உற்சாகம்
பிரபல பாடகர் எஸ்.பி.பி.,யின் புகழ் பெற்ற 25 பாடல்களை, உதயராகம் யு.கே.முரளி இசை குழுவினரின் இசையில், எஸ்.பி.பி.சரண், பிரியங்கா மற்றும் குழுவினர் பாடி அசத்திய கச்சேரி, தேனாம்பேட்டை காமராஜர் அரங்கில் நடந்தது.நிகழ்ச்சியின் துவக்கமாக, 'சங்கரா' எனத் துவங்கும் சிவனைப் பற்றிய பாடல் பாடி இசை பயணத்தை துவங்கினார் எஸ்.பி.பி.சரண்.அடுத்த பாடலாக, 2000களில் துவங்கி இன்று வரை இளசுகளின் மனதை கொள்ளை கொண்ட 'அழகூரில் பூத்தவளே' பாடலை பாடினர். வித்யாசாகர் மெல்லிசையில் உருவான இப்பாடலை, சரண், பிரியங்கா மேடையில் பாடினர்.தொடர்ந்து, மெல்ல திறந்தது கதவு படத்தில் இருந்து 'தேடும் கண் பார்வை தவிக்க' பாடல், பட்டித்தொட்டி எங்கும் வெற்றி பெற்ற கரகாட்டக்காரன் படத்தின் 'மாங்குயிலே பூங்குயிலே சேதி ஒண்ணு கேளு' பாடலுக்கு, அரங்கமே அதிர்ந்தது.'அந்தி மழை பொழிகிறது' பாடலின் இசை துவங்கும் போது, அரங்கமே கைத்தட்டி ஆமோதித்தது. தொடர்ந்து, 'பனி விழும் இரவு, என்ன சத்தம் நேரம், ரோஜாவை தாலாட்டும் தென்றல், 'சுந்தரி கண்ணால் ஒரு சேதி' ஆகிய பாடல்களை, ரசிகர்களும் சேர்ந்து பாடி அசத்தினர்.இறுதியாக, 'ஜிலிபிலி பலுகுல' எனும் தெலுங்கு பாடலை பாடி நிகழ்ச்சியை நிறைவு செய்தனர்.ரசிகர்கள் மனம் திருப்தியடைந்தாலும், திரும்பி செல்ல மனமில்லாமல் தங்கள் வணக்கத்தோடு கலந்த அன்பை செலுத்தி, அரங்கிலிருந்து விடைபெற்றனர்.- நமது நிருபர் -