மேலும் செய்திகள்
இருசக்கர வாகன விபத்து; இரண்டு இளைஞர்கள் பலி
09-May-2025
சித்தாமூர் :செங்கல்பட்டு மாவட்டம், சித்தாமூர் அடுத்த கொளத்துாரைச் சேர்ந்தவர் கார்த்திக், 35. இவர், 'ஸ்பிளண்டர்' இருசக்கர வாகனத்தில், மகள் ஷஸ்மிதா, 5, மகன் கிஸ்வந்த், 8, ஆகியோரை ஏற்றி, நேற்று முன்தினம் இரவு செய்யூர் நோக்கிச் சென்று கொண்டிருந்தார்.நல்லாமூர் பெட்ரோல் பங்க் அருகே, செய்யூரில் இருந்து சித்தாமூர் நோக்கி அதிவேகமாக வந்த, 'மகேந்திரா ஷைலோ' கார் ஓட்டுநர், முன்னால் சென்ற லாரியை முந்த முயன்றார்.அப்போது கட்டுப்பாட்டை இழந்து, எதிரே வந்த கார்த்திக் வாகனத்தின் மீது மோதியதில், மூவரும் துாக்கி வீசப்பட்டனர்.அவ்வழியே சென்றோர், '108' ஆம்புலன்ஸ் வாயிலாக கார்த்திக்கை அச்சிறுபாக்கம் அரசு மருத்துவமனைக்கும், ஷஸ்மிதா, கிஸ்வந்த் ஆகியோரை மதுராந்தகம் அரசு மருத்துவமனைக்கும் அனுப்பினர்.இரவு 8:30 மணிக்கு கார்த்திக், ஷஸ்மிதா ஆகிய இருவரும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். கிஸ்வந்த், செங்கல்பட்டு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.விபத்து ஏற்படுத்திய காரை, சாலையோரத்தில் நிறுத்தி ஓட்டுநர் தப்பி ஓடிவிட்டார். சித்தாமூர் போலீசார் வழக்கு பதிந்து, காரை பறிமுதல் செய்தனர்.முதற்கட்ட விசாரணையில், இதே கார் ஓட்டுநர், காட்டுதேவாத்துார் அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற, கொள்ளம்பாக்கத்தைச் சேர்ந்த முத்து, 40, என்பவர் மீது மோதி, அவரது மார்பு பகுதியில் காயம் ஏற்படுத்தியதும், அங்கிருந்து தப்பி வந்தபோது கார்த்திக் வாகனத்தில் மோதியதும் தெரியவந்தது. கார் ஓட்டுநரை, போலீசார் தேடுகின்றனர்.
09-May-2025