குப்பையை தரம் பிரித்து வழங்காதோருக்கு அபராதம்: எம்.எல்.ஏ., ரேவந்த் தகவல்
நெற்குன்றம்: ‘‘குப்பையை தரம் பிரித்து வழங்காதோருக்கு அபராதம் விதிப்பது குறித்து பரிசீலித்து வருகிறோம்,’’ என, மதுரவாயல் த.வெ.க., – எம்.எல்.ஏ., ரேவந்த் சரண் தெரிவித்தார். சென்னை மாநகராட்சியின் 11 முதல் 15 வரையிலான மண்டலங்களில், 33 பள்ளிகளில் ‘துாய்மை சாம்ப்ஸ் திட்டம்’ செயல்படுத்தப்படுகிறது. இதன் வாயிலாக, மாணவ – மாணவியருக்கு திடக்கழிவு மேலாண்மை பயிற்சி அளிப்பதுடன், தெருக்களை தத்தெடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், வளசரவாக்கம் மண்டலம் நெற்குன்றத்தில், சென்னை மாநகராட்சியின் பள்ளிக்கல்வித் துறை மற்றும் ‘சுமீத் எல்கோ’ நிறுவனம் இணைந்து செயல்படுத்தும், ‘துாய்மை சாம்ப்ஸ், குப்பை பிரிப்போம் – நாளை காப்போம்’ திட்டங்களின் விரிவாக்க நிகழ்ச்சி, நேற்று நடந்தது. இதில், மதுரவாயல் த.வெ.க., – எம்.எல்.ஏ., ரேவந்த் சரண், கவுன்சிலர் கிரிதரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். குப்பையை முறையாக தரம் பிரித்து வழங்கிய பொதுமக்களுக்கு விருதுகள் வழங்கிய எம்.எல்.ஏ., வீடு வீடாகச் சென்று குப்பையை தரம் பிரிப்பதற்கான பைகளையும் வழங்கினார். இதுகுறித்து எம்.எல்.ஏ., ரேவந்த் சரண் கூறுகையில், ‘‘குப்பையை தரம் பிரித்து வழங்குவதால், துாய்மைப் பணியாளர்களின் பணிச்சுமை குறையும். பள்ளி மாணவ – மாணவியர் வாயிலாக பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. குப்பையை தரம் பிரித்து வழங்காதோருக்கு அபராதம் விதிப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது,’’ என்றனர்.