12,500 லி., நீர் பிடிக்கும் வாகனங்கள் தீயணைப்பு துறை கொள்முதல்
தமிழக தீயணைப்பு துறைக்கு அதிநவீன வாகனங்கள் மற்றும் உபகரணங்கள் கொள்முதல் செய்யப்பட்டு வருகின்றன.அதன் அடிப்படையில் தற்போது, ஏழு கோடி ரூபாய் செலவில், 10 'வாட்டர் பவுசர்' வாகனங்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன.இதுகுறித்து தீயணைப்பு துறை அலுவலர் கூறியதாவது:தீயணைப்பு துறையில், தற்போது பயன்படுத்தும் வாகனங்களில், 5,500 லிட்டர் தண்ணீரை மட்டுமே எடுத்துச்செல்ல முடியும். இதனால், பெரிய அளவில் தீ விபத்து ஏற்பட்டால், தண்ணீரின்றி தவிக்கும் நிலை ஏற்படுகிறது. குடிநீர் வாரிய லாரிகளை வரவழைத்து, தீயணைப்பு வாகனங்களுக்கு தண்ணீர் ஏற்றி, அதன் பின் தீயை அணைக்க வேண்டியுள்ளது.இதற்கு தீர்வு காணும் விதமாக தற்போது, 12,500 லிட்டர் தண்ணீர் கொள்ளளவு உடைய தீயணைப்பு வாகனங்களை கொள்முதல் செய்துள்ளோம். பெரிய அளவில் தீ விபத்து ஏற்படும் இடங்களில், இந்த வகை வாகனங்கள் பயன்படுத்தப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.- நமது நிருபர் -