மேலும் செய்திகள்
அட, பார்ரா! பறவைகளுக்கும் 'ஹாஸ்டல்'
06-Sep-2025
சென்னை: சென்னையில் முதல் முறையாக 'சாண்டர்ஸ் ஆலா' எனும் கருப்பு இறக்கை தண்டு சிறிய ஆலா பறவையின் வருகை பதிவு செய்யப்பட்டுள்ளது என, பறவை ஆர்வலர்கள் தெரிவித்தனர். தமிழகத்திற்கு பொதுவாக, அக்டோபர், நவம்பர் மாதங்களில் வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து பறவைகள் வருகை தரும். சென்னையை பொறுத்தவரை, பள்ளிக்கரணை சதுப்பு நிலம் உள்ளிட்ட பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் மட்டுமே, பறவைகள் வருகை இருக்கும். இந்நிலையில் வழக்கத்துக்கு மாறாக, இதில், அடையாறு உடைந்த பாலம் பகுதியில், 'சாண்டர்ஸ் ஆலா' எனும் கருப்பு இறக்கை தண்டு சிறிய ஆலா எனும் அரிய வகை பறவை வருகை தந்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. 'தி நேச்சர் டிரஸ்ட்' அமைப்பின் நிறுவனர் திருநாரணன் கூறியதாவது: சிறிய வகை கடற்பறவையாக வகைப்படுத்தப்படும் கருப்பு இறக்கை தண்டு சிறிய ஆலா, சென்னையில் காணப்படுவது குறித்து இதுவரை எந்த பதிவும் இல்லை. தற்போது, முதல் முறையாக அடையாறு உடைந்த பாலம் பகுதியில், இதன் வருகை பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தியா - இலங்கை இடையிலான ராமர்பாலம் பகுதியில் மணல் திட்டுக்களில் தங்கி செல்லும் இப்பறவை, நிலத்தில் கூடுகட்டி இனப்பெருக்கம் செய்யும் பழக்கம் உடையது. தேவையான உணவு கிடைப்பதால் இங்கு வந்துள்ளதாக தெரிகிறது. இதனால், இப்பகுதியின் சூழலியல் தன்மை முக்கியத்துவம் பெறுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
06-Sep-2025