தண்ணீர் லாரி மோதி உருக்குலைந்த கார் மீன் வியாபாரி பலி; இருவர் படுகாயம்
கீழ்ப்பாக்கத்தில் பதற வைத்த விபத்துகீழ்ப்பாக்கம்: கீழ்ப்பாக்கத்தில், கார் மீது அதிவேகமாக வந்த தண்ணீர் லாரி மோதிய பயங்கர விபத்தில், மீன் வியாபாரி பலியானார்; சகோதரர் மற்றும் நண்பர் படுகாயமடைந்தனர். பட்டாளம், கார்ப்பரேஷன் தெருவைச் சேர்ந்தவர் விக்னேஷ், 33. இவரது சகோதரர்கள் சீனிவாசன், 30, விஜய், 28. மூவரும், வானகரம் மீன் சந்தையில் வியாபாரம் செய்கின்றனர். இந்த நிலையில், சீனிவாசன், விஜய் மற்றும் அவர்களது நண்பர் கிஷோர், 19, ஆகியோர், நேற்று அதிகாலை 2:30 மணியளவில் 'ஹூண்டாய் - ஐ20' காரில் வானகரம் மீன் சந்தைக்கு சென்றனர். காரை விஜய் ஓட்டினார். கீழ்ப்பாக்கம் - பூந்தமல்லி நெடுஞ்சாலையில், ஈகா திரையரங்கம் சிக்னலை கடக்கும்போது, அமைந்தகரையில் இருந்து வேகமாக வந்த தண்ணீர் லாரி, திடீரென வலதுபக்கமாக சேத்துப்பட்டு செல்லும் சாலைக்கு திரும்பியது. இதில், காரும் அதிவேகமாக வந்த லாரியும், நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது. பதற வைத்த இந்த விபத்தில், காரின் வலது பக்கம் உருக்குலைந்தது. காரில் இருந்த மூவரும் பலத்த காயமடைந்தனர். பலத்த சத்தம் கேட்டு வீடுகளில் இருந்து வெளியே வந்த அப்பகுதியினர், விபத்தில் சிக்கிய மூவரையும் மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு விஜய், சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். மற்ற இருவரும் தீவிர சிகிச்சையில் உள்ளனர். கீழ்ப்பாக்கம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், விபத்துக்கு காரணமான துாத்துக்குடியைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் சங்கர், 47, என்பவரை கைது செய்து விசாரிக் கின்றனர்.