உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / 1,000 வீடுகளை சூழ்ந்த வெள்ளம்: குட்டி தீவாக மாறியது நத்தமேடு 

1,000 வீடுகளை சூழ்ந்த வெள்ளம்: குட்டி தீவாக மாறியது நத்தமேடு 

ஆவடி: நத்தமேடு ஏரி நிரம்பி, சுற்றுவட்டார 1,000க்கும் மேற்பட்ட வீடுகளை சூழ்ந்ததால், அப்பகுதி தீவு போல மாறி வருகிறது. திருநின்றவூர் அடுத்த நத்தமேடு ஊராட்சியில் 429 ஏக்கர் பரப்பளவு உடைய நத்தமேடு ஏரி அமைந்துள்ளது. நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் உள்ள நத்தமேடு ஏரியில், 100க்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்புகள் உள்ளன. வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்த நிலையில், நத்தமேடு ஏரியில் தண்ணீர் வேகமாக நிரம்பி வருகிறது. ஏரியின் சுற்றுவட்டாரப் பகுதிகளான, நத்தமேடு அண்ணா நகர், கிழக்கு, மேற்கு, மத்திய பகுதிகளில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டு, குடியிருப்பை சுற்றி தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால், இயல்பு வாழ்க்கை முடங்கி உள்ளது. மேலும், கட்டுவிரியன், நீர்ப்பாம்பு, பூரான் உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் வீடுகளுக்குள் படையெடுப்பதால் பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர். எனவே, மாவட்ட நிர்வாகம் நத்தமேடு ஏரியை துார்வாரி, வரும் ஆண்டுகளிலாவது வெள்ள பாதிப்பு ஏற்படாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வலுத்துள்ளது. கலெக்டர் ஆய்வு இந்த நிலையில், நத்தமேடு ஏரி அருகே உபரி நீர் செல்லும் கால்வாயில், திருவள்ளூர் கலெக்டர் பிரதாப், நேற்று முற்பகல் திடீர் ஆய்வு மேற் கொண்டார். பின், உபரி நீர் சீராக வெளியேற வழிவகை செய்ய வேண்டும் என, நீர்வளத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். ஆனால், வெள்ளத்தில் தத்தளிக்கும் பொதுமக்களை சந்திக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மக்கள் வேதனை

இது குறித்து நத்தமேடு பகுதிமக்கள் கூறியதாவது: கடந்த 30 ஆண்டுகளாக இங்கு வசித்து வருகிறோம். ஒவ்வொரு மழையின்போது பாதிப்பு ஏற்படுகிறது. அரசியல்வாதிகள், அதிகாரிகள் வந்து பார்த்துவிட்டு செல்வதோடு சரி, எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. சமைப்பதற்கும் குடிப்பதற்கும் இந்த தண்ணீரை தான் பயன்படுத்தி வருகிறோம். இந்த தண்ணீரை குடித்து தான் சாகிறோம். இடுப்பளவுக்கு வெள்ளம் தேங்கி நிற்பதால், காய்ச்சல் ஏற்பட்டால் கூட மருத்துவமனைக்கு செல்ல முடியவில்லை. இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை