பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் கட்டுமான அனுமதி தரவில்லை வனத்துறை விளக்கம்
சென்னை: 'பள்ளிக்கரணை சதுப்பு நில பகுதியில், கட்டுமான திட்டத்துக்கு அனுமதி வழங்கப்படவில்லை. சதுப்பு நிலத்திற்கு வெளியில் உள்ள தனியார் பட்டா நிலத்தில் கட்டுமான பணிகளுக்கு திட்ட அனுமதி வழங்கப்பட்டு உள்ளது' என, வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை தெரிவித்துள்ளது. வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை வெளியிட்ட அறிக்கை: சென்னை பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தின் ராம்சார் தல பகுதியில், ஒரு தனியார் நிறுவனத்தின் அடுக்குமாடி திட்டக்குக்கு ஒப்புதல் வழங்கப்பட்டு உள்ளதாக செய்திகள் வெளியாகின. தமிழக வனச்சட்டம் - 1882ன் படி, பள்ளிக்கரணை பகுதியில், 1,724 ஏக்கர் நிலம் சதுப்பு நில காப்புக்காடாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இதில், எந்தவிதமான கட்டுமான திட்டத்துக்கும் அனுமதி அளிப்பதில்லை. இது, வனத்துறைக்கு சொந்தமான, பாதுகாக்கப்பட்ட பகுதியாக உள்ளது. இந்நிலையில், பள்ளிக்கரணை சதுப்பு நிலம் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகள் அடங்கிய, 3,083 ஏக்கர் பகுதி ராம்சார் தலமாக அறிவிக்கப்பட்டது. இதில் சதுப்பு நிலத்துக்கு வெளியில் உள்ள, 1,359 ஏக்கர் நிலத்தை சர்வே எண் வாரியாக கண்டறிந்து, எல்லை வரையறை செய்யும் பணிகள் இன்னும் மேற்கொள்ளப்படவில்லை. இதற்கான பணிகள், தேசிய நிலையான கடற்கரை மேலாண்மை மையத்திடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. இத்துடன், பள்ளிக்கரணை ராம்சார் தல ஒருங்கிணைந்த மேலாண்மை திட்டம் தயாரிக்கும் பணிகளும் நடந்து வருகின்றன. இதன்படி, வரைபடம் தயாரித்து, பொதுமக்களிடம் கருத்து கேட்டு, அதன் அடிப்படையில் வனத்துறை இறுதி முடிவுகள் எடுத்து அறிவிக்கும். இதற்கு, 240 நாட்கள் அவகாசம் உள்ளது. ராம்சார் தல இடங்கள் இன்னும் வரையறை செய்யப்படாததால், பள்ளிக்கரணை சதுப்பு நில காப்புக்காட்டுக்கு வெளியில் உள்ள, தனியார் பட்டா நிலங்களில் மட்டுமே, சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனத்துக்கு கட்டுமான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. ஆக்கிரமிப்பு உள்ளது வனச்சரகர் ஒப்புதல் பெருங்குடி கல்லுக்குட்டை பகுதி சதுப்பு நிலம், கால் கிரவுண்ட், 10 லட்சம் ரூபாய்க்கு சட்ட விரோதமாக விற்பது குறித்து, நம் நாளிதழில் நேற்று செய்தி வெளியானது. இது தொடர்பாக, சென்னை வனக்கோட்ட மாவட்ட வன அலுவலர் சுப்பையா அளித்துள்ள விளக்கம்: பெருங்குடி கல்லுக்குட்டை பகுதியில், 86.08 ஏக்கர் பரப்பளவு மட்டுமே, சதுப்பு நிலமாக வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இங்கு, கே.பி.கந்தன் நகர் ஆக்கிரமிப்பு பகுதி உள்ளது. இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றி, மக்களை வேறு இடங்களுக்கு மறுகுடியமர்வு செய்வதற்கான தொடர் நடவடிக்கைகள், வனத்துறை வாயிலாக எடுக்கப்பட்டு வருகின்றன. அருகில் உள்ள நிலம் அரசு தரிசு நிலமாக உள்ளது. இதில் ஆக்கிரமிப்புகளை தடுக்க, சோழிங்கநல்லுார் தாசில்தாருக்கு, பள்ளிக்கரணை வனச்சரக அலுவலர் வாயிலாக அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. கூட்டு சதியா? ''பள்ளிக்கரணை ராம்சர் சதுப்பு நில பகுதியில், சுற்றுச்சூழல் பாதுகாப்பு விதிகளை மீறி, கட்டுமான திட்டத்திற்கு ஒப்புதல் தரப்பட்டுள்ளது. மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம், சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம், வனத்துறை, நீர்வளத்துறை ஆகியவை கூட்டுச் சதி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை ஒட்டியுள்ள கல்லுக்குட்டை சதுப்பு நிலப்பகுதி, சட்டவிரோத பரிவர்த்தனைகள் மற்றும் ரியல் எஸ்டேட் மாபியாக்களுக்கு ஆதாரமாக உள்ளது. எனவே, கட்டுமான அனுமதியை ரத்து செய்வதோடு, இதில் ஈடுபட்டோரை கண்டறிந்து, அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுகுறித்து, மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் புபேந்தர் யாதவுக்கு கடிதம் எழுதியுள்ளேன். - சுதாகர்ரெட்டி, பா.ஜ., மேலிட பொறுப்பாளர்.