இளைஞரை இரும்பு ராடால் தாக்கிய நண்பர்கள் நான்கு பேர் கைது
குன்றத்துார் : குன்றத்துார் அருகே இளைஞரை இரும்பு ராடால் தாக்கிய நண்பர்கள் நான்கு பேரை, போலீசார் நேற்று கைது செய்தனர். குன்றத்துார் அருகே திருமுடிவாக்கம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் பூபாலன், 32. தனியார் தொழிற்சாலை ஊழியர். அதே பகுதியை சேர்ந்த இவரது நண்பர்கள், தமிழ் அழகு, 24, சுரேஷ், 35, தாஸ், 36, ஏசுராஜன், 33, ஆகிய ஐந்து பேரும், அதே பகுதியில் நடந்த அடிதடி சம்பவத்தில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டனர். சிறையில் இருந்து ஜாமின் பெற்று, அவர்கள் அண்மையில் வெளியே வந்த நிலையில், நான்கு நண்பர்களுடனும் பேசுவதை, பூபாலன் தவிர்த்து, வேலைக்கு சென்று வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் தமிழ் அழகு உள்ளிட்ட நான்கு பேரும் மது அருந்தினர். அப்போது, அந்த வழியே சென்ற பூபாலனை, மது அருந்த அழைத்துள்ளனர். ஆனால், அவர்களை பொருட்படுத்தாமல் பூபாலன் சென்றுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த நான்கு பேரும், மது பாட்டில் மற்றும் இரும்பு ராடால் பூபாலனை சரமாரியாக தாக்கினர். இதில் பலத்த காயமடைந்த பூபாலன், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவத்தில், குன்றத்துார் போலீசார் வழக்கு பதிந்து, தமிழ்அழகு, சுரேஷ், தாஸ், ஏசுராஜன் ஆகிய நான்கு பேரையும் கைது செய்து, நேற்று சிறையில் அடைத்தன ர்.