மேலும் நான்கு கடற்கரை ரூ.20 கோடியில் மேம்படுகிறது
சென்னை 'நீலக்கொடி' சான்று பெறுவதற்காக, மெரினா கடற்கரையின் ஒரு பகுதியை மேம்படுத்தியதுபோல், மெரினாவின் மற்றொரு பகுதி, திருவான்மியூர், பாலவாக்கம், உத்தண்டி கடற்கரைகளை, 20 கோடி ரூபாயில், மாநகராட்சி மேம்படுத்த உள்ளது. நீலக்கொடி சான்று என்பது, சுற்றுச்சூழலுக்கு ஏற்ற, துாய்மையான கடற்கரைகளுக்கு வழங்கப்படும் ஒரு சர்வதேச அங்கீகாரம். செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள கோவளம் கடற்கரைக்கு, இந்த சான்று வழங்கப் பட்டுள்ளது. மற்ற கடற்கரைகளுக்கும் நீலக்கொடி சான்று பெறும் முயற்சியில், அரசு ஈடுபட்டுள்ளது. முதற்கட்டமாக மெரினா கடற்கரையில் கண்காணிப்பு கோபுரம், மூங்கில் நிழற்குடைகள், சாய்வு நாற்காலிகள் உள்ளிட்ட, 16 பணிகள் மேற்கொள்ளப்பட்டு, கடற்கரை மேம்படுத்தப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு நேற்று திறக்கப்பட்டது. இந்நிலையில் விவேகானந்தர் இல்லம் எதிர் பகுதி, திருவான்மியூர், பாலவாக்கம், உத்தண்டி ஆகிய கடற்கரைகளிலும், மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. தலா ஐந்து கோடி ரூபாய் என, நான்கு இடங்களிலும், 20 கோடி ரூபாய் செலவில், கடற்கரை மேம்படுத்தும் பணி சில தினங்களில் துவங்கும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.