உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மீனவர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய நான்கு பேருக்கு காப்பு

மீனவர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய நான்கு பேருக்கு காப்பு

சென்னை; மது அருந்தியதை தட்டிக்கேட்டதால், மீனவர் வீட்டு வாசலில் பெட்ரோல் குண்டு வீசி தப்பிய கல்லுாரி மாணவர்கள் உட்பட, நால்வரை, போலீசார் நேற்று கைது செய்தனர். சென்னை, திருவொற்றியூர், பலகை தொட்டிகுப்பத்தைச் சேர்ந்தவர் தேசப்பன், 59; தி.மு.க., பிரமுகர் மற்றும் மீனவர். இம்மாதம் 7ம் தேதி அதிகாலை, கடலுக்கு செல்வதற்காக, வீட்டில் இருந்து கிளம்பினார். அப்போது, இரண்டு இருசக்கர வாகனங்களில் வந்த நான்கு பேர் கும்பல், இவரது வீட்டு வாசலில் பெட்ரோல் குண்டுகளை வீசி சென்றது. இது குறித்து தேசப்பன், திருவொற்றியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். வழக்கு பதிவு செய்த போலீசார், குண்டு வீச்சில் தொடர்புடைய எர்ணாவூரைச் சேர்ந்த பச்சையப்பன் கல்லுாரி மாணவர்களான, சந்தோஷ் என்ற சாண்டி, 20, யுவராஜ், 18, சூர்யா, 19, மற்றும் 16 வயது சிறுவன் உட்பட நால்வரை, நேற்று கைது செய்தனர். விசாரணையில், சில தினங்களுக்கு முன், தேசப்பன் வீட்டின் அருகே அமர்ந்து நான்கு பேரும் மது அருந்தியுள்ளனர். அதை, தேசப்பன் கண்டித்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த கும்பல், அவர் வீட்டின் முன் பெட்ரோல் குண்டு வீசி சென்றது தெரிய வந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ