சான்றிதழ் முதல் சொத்து ஆவணம் வரை விற்பனை ஆபீஸ் போட்டு போலி தயாரித்த கில்லாடிகள் கைது கோர்ட் உத்தரவுடன் ரெய்டு நடத்தி பிடித்த போலீஸ்
வில்லிவாக்கம், வில்லிவாக்கம், பாலாம்பிகை நகரில், 'பிரபஞ்சம் பத்திரிகை ஊடக சங்கம்' என்ற பெயரிலான அலுவலகத்தில், பள்ளி, கல்லுாரி சான்றிதழ்கள் மற்றும் நில ஆவணங்களை போலியாக தயாரித்து வழங்குவதாக, ராஜமங்கலம் போலீசாருக்கு புகார்கள் வந்தன.போலீசார் ஆய்வுக்கு சென்றபோது, நீதிமன்ற உத்தரவு இருக்கிறதா என, மிரட்டியுள்ளனர். இதையடுத்து, இன்ஸ்பெக்டர் மூர்த்தி, எழும்பூர் 13வது நீதிமன்ற நீதிபதி தர்மபிரபுவிடம், விபரத்தை எடுத்துச் சென்று, ஆய்வு நடத்த அனுமதி பெற்றார். தொடர்ந்து, அந்த அலுவலகத்தில் நேற்று முன்தினம் சோதனை நடந்தது. இதில், அங்கு போலி ஆவணங்கள் தயாரிப்பது உறுதி செய்யப்பட்டது. அங்கிருந்த கணினி, மடிக்கணினி, மொபைல்போன், பென்டிரைவ், ஸ்டாம்ப் பேப்பர் மற்றும் ஆவணங்களை போலீசார் கைப்பற்றினர். இதுதொடர்பாக, அந்த அலுவலகத்தை நடத்தி வந்த ரூபன் , 42, விஜய் ஆனந்த், 47, ஆகியோரை கைது செய்தனர். இன்ஸ்பெக்டர் மூர்த்தியின் அறிக்கையின்படி, ராஜமங்கலம் காவல்நிலையத்தில் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.இதுகுறித்து, போலீசார் கூறியதாவது:கைதான விஜய் ஆனந்த், 47, புத்தகரம், பத்மாவதி நகரை சேர்ந்தவர். 'பிரபஞ்சம்' என்ற பெயரில், எட்டு ஆண்டுகளாக பத்திரிகை அலுவலகத்தை நடத்தி வந்துள்ளார். இவருடன், ஆவடியை சேர்ந்த ரூபன், 42, என்பவரும் சேர்ந்து, மோசடியில் ஈடுபட்டுள்ளனர். வழக்கறிஞருக்கு படிக்காமலேயே, ரூபன் தன்னை வழக்கறிஞர் என்று அடையாளப்படுத்தி உள்ளார்.இருவரும், தங்களிடம் வருவோருக்கு பள்ளி, கல்லுாரி சான்றிதழ்களை போலியாக தயாரித்து கொடுத்துள்ளனர். இதற்கான, சான்றிதழ்களுக்கு ஏற்ப, ஒரு லட்சம் ரூபாய் வரை வசூல் நடத்தியுள்ளனர். போலி ஆவணங்களை தயாரிக்கையில், சந்தேகம் வராமல் இருக்க, வில்லிவாக்கம் சுரங்கப்பாதை அருகில் உள்ள ஆரஞ்சு ஜெராக்ஸ், பெரம்பூர் ரயில் நிலையம் அருகில் உள்ள, 'கோ டேக்' என்ற ஜெராக்ஸ் கடைகளில், பிரிண்ட்டிங் செய்துள்ளனர். மேலும், போலி ஆவணங்களை கேட்டு, இவர்களை தொடர்பு கொள்பவர்களை, இவர்கள் சங்க உறுப்பினராக சேர்த்து, மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.குறிப்பாக, ஆர்.டி.ஐ., வாயிலாக விபரங்களை பெற்று, தமிழகத்தில் காலியாக உள்ள மனைகளுக்கு, போலி பத்திரங்களை தயார் செய்து, நில அபகரிப்பு மோசடியில் ஈடுபட்டுள்ளதும் தெரிய வந்துள்ளது. இதுகுறித்து மேலும் விசாரித்து வருகிறோம்.இவ்வாறு போலீசார் கூறினர்.