மருத்துவ கழிவை எரித்த கும்பல் சிறைப்பிடிப்பு
சென்னை,செங்குன்றம் அருகே புழல் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட தீர்த்தகரையம்பட்டு பகுதியில், குமரன் நகர், செந்தில்வேலவன் நகர், நியூ சன் கார்டன், பவானி அம்மன் நகர் உள்ளிட்ட பல பகுதிகள் உள்ளன. இங்கு 200க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.கடந்த சில நாட்களாக இப்பகுதியில், மருத்துவக் கழிவை கொட்டி, ஒரு கும்பல் எரித்து வந்துள்ளது. அப்பகுதிவாசிகள் பேரூராட்சி நிர்வாகத்திடமும், காவல்துறையிடமும் புகார் தெரிவித்தனர். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மருத்துவ கழிவு எரிப்பது தொடர்ந்தது.இதனால் அதிருப்தியடைந்த அப்பகுதி வாசிகள், நேற்று இரவு 8:30 மணியளவில் மருத்துவ கழிவுகளை எரிக்க சென்ற லாரியை மடக்கினர். லாரியில் இருந்த நான்கு பேரை பிடித்து, காவல்துறை மற்றும் பஞ்சாயத்து நிர்வாகத்திடம் ஒப்படைத்தனர்.இதுகுறித்து செங்குன்றம் போலீசாரும், பேரூராட்சி நிர்வாகத்தினரும் விசாரித்து வருகின்றனர்.இதுகுறித்து, அப்பகுதி வாசிகள் கூறியதாவது:எங்கள் பகுதியில் தினமும் இரவானால் துர்நாற்றத்துடன் புகை சூழ்ந்து விடுகிறது. கண் எரிச்சல், இருமல் போன்ற உபாதைகளால் பாதிக்கப்பட்டு வந்தோம். பாடியநல்லுார் குப்பை கொட்டும் இடத்தில், சிலர் மருத்துவ கழிவை கொட்டி எரிப்பது தெரியவந்தது. புகார் அளித்தும் நடவடிக்கை இல்லாததால், நாங்களே அவர்களை பிடித்துக் கொடுத்தோம். இனியும் இந்த தொல்லை தொடராத வகையில், அரசு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.