உடற்பயிற்சிக்கு ஸ்டீராய்டு பயன்படுத்தியவர் உயிரிழப்பு
காசிமேடு, சென்னை, காசிமேடு, ஜீவரத்தினம் நகர், 'இ' பிளாக்கை சேர்ந்தவர் ராம்கி, 35; மீனவர். இவருக்கு திருமணமாகி, நான்கு ஆண்டுகளாகிறது. ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக கணவன், மனைவி இருவரும் ஓராண்டாக பிரிந்து வாழ்கின்றனர். திருவொற்றியூர், காலடிப்பேட்டையில் உள்ள தனியார் உடற்பயிற்சி கூடத்தில், ஐந்து மாதங்களாக ராம்கி உடற்பயிற்சி செய்து வந்தார். சில நாள்களாக கடும் வயிற்று வலி, உடல் வலியால் பாதிக்கப்பட்ட ராம்கியை, குடும்பத்தினர் மண்ணடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு மருத்துவ பரிசோதனையில், ஸ்டீராய்டு பாதிப்பால், இரண்டு சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்டது தெரியவந்தது. தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி, ராம்கி நேற்று உயிரிழந்தார்.இதுகுறித்து காசிமேடு போலீசார் வழக்கு பதிந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர்.ஜிம் பயிற்சியாளர் தினேஷ் அறிவுரையின்படி, ஸ்டீராய்டு மருந்து எடுத்து கொண்டதால் ராம்கி உயிரிழந்ததாக குடும்பத்தினர் குற்றம் சாட்டினர். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.