தனியார் மருத்துவமனைகள் கைவிரித்த 3 குழந்தைகளுக்கு மறுவாழ்வளித்த ஜி.ஹெச்.,
சென்னை, தனியார் மருத்துவமனைகள் கைவிரித்த நிலையில், மூன்று குழந்தைகளுக்கு சிக்கலான அறுவை சிகிச்சை செய்து, எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனை டாக்டர்கள் காப்பாற்றி உள்ளனர்.இது குறித்து, மருத்துவமனை இயக்குனர் ரெமா சந்திரமோகன், நுண்துளை மற்றும் புற்றுநோய் அறுவை சிகிச்சை தலைமை டாக்டர் சங்கரபாரதி ஆகியோர் கூறியதாவது:திருவண்ணாமலை, செய்யாறு பகுதியைச் சேர்ந்த நிவாஸ் என்ற ஒரு வயது குழந்தையின் மார்பக பகுதியில், மகாதமனி அருகே, உணவு குழாய் மற்றும் சுவாச குழாயை அழுத்தியிருந்த, 4 செ.மீ., அளவிலான கட்டி, நுண்துளை அறுவை சிகிச்சை வாயிலாக, சிக்கலான இடத்தில் இருந்து அகற்றப்பட்டது.ஆந்திராவைச் சேர்ந்த வெங்கட் மது என்ற 5 வயது குழந்தைக்கு, வயிற்று பகுதியில், 15 செ.மீ., அளவில், 1 கிலோ எடையில் இருந்த புற்றுநோய் கட்டியை, வயிற்றுச்சுவர் மறு சீரமைப்பு செய்து, குழந்தையை காப்பாற்றினோம்.வேளச்சேரியைச் சேர்ந்த வில்சன் என்ற 5 வயது குழந்தைக்கு, தனியார் மருத்துவமனையில், கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. மூச்சுத் திணறலுடன் இங்கு அனுமதிக்கப்பட்ட சிறுவனுக்கு, வலது பக்கத்தில் உதரவிதானம் பலவீனம் அடைந்திருந்தது.நுரையீரலின் கீழ் பகுதிக்கும், வயிற்றின் மேல் பகுதிக்கும் இடையே இருக்கும் ஜவ்வு அமைப்பு, உதரவிதானம் எனப்படுகிறது. இது, வயிற்று குடல், நெஞ்சறை உள் நுழைந்து நுரையீரலை அழுத்தி கொண்டே இருப்பது தெரிய வந்தது.இதையடுத்து, நுண்துளை அறுவை சிகிச்சை வாயிலாக, குழந்தையின் உதரவிதானம் வலுவாக்கப்பட்டு சரிசெய்யப்பட்டது. இச்சிகிச்சையை, நுண்துளை மற்றும் புற்றுநோய் அறுவை சிகிச்சை தலைமை டாக்டர் சங்கரபாரதி தலைமையில், டாக்டர்கள் விவேக், ஜீவரதி, எபினசர் உள்ளிட்ட குழுவினர் வெற்றிகரமாக மேற்கொண்டனர்.தனியார் மருத்துவமனைகளில் கைவிடப்பட்ட நிலையில், மூன்று குழந்தைளும் இங்கு வந்தனர். தற்போது நலமுடன் உள்ளனர். இச்சிகிச்சை முறைகள் தனியார் மருத்துவமனையில் மேற்கொண்டால், 5 லட்சம் ரூபாய் வரை செலவாகும். முதல்வர் காப்பீட்டு திட்டத்தில் இலவசமாக மேற்கொள்ளப்பட்டது.இவ்வாறு அவர்கள் கூறினர்.