கிண்டிக்கு மாறும் கலெக்டர் அலுவலகம் 3.63 ஏக்கர் நிலம் ஒதுக்கியது அரசு
சென்னை: வடசென்னை பாரிமுனையில் இடநெருக்கடி, போக்குவரத்து நெரிசலால் திணறி வரும் சென்னை கலெக்டர் அலுவலகத்தை, தென்சென்னையில் கிண்டிக்கு இடம் மாற்ற அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக, 3.63 ஏக்கர் இடத்தை ஒதுக்கி, அரசாணை வெளியிட்டு உள்ளது. சென்னை எழிலகத்தில் செயல்பட்டு வந்த மாவட்ட கலெக்டர் அலுவலகம், 1997ம் ஆண்டு முதல், வடசென்னை பாரிமுனையில் ராஜாஜி சாலையில் உள்ள, சிங்காரவேலர் மாளிகையில் செயல்பட்டு வருகிறது. கடந்த 1791ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, மூன்று லட்சமாக இருந்த மக்கள் தொகை, 2011ல் 46.46 லட்சமாக உயர்ந்தது. தற்போது, ஒரு கோடியை தாண்டியுள்ளது. காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டத்தில் இருந்த சில பகுதிகள், சென்னை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டன. இந்த பகுதிகள் நான்கு ஆண்டுகளுக்குமுன், சென்னை மாவட்டத்துடன் இணைக்கப்பட்டன. இதனால், 178 சதுர கி.மீ., ஆக இருந்த சென்னை மாவட்ட பரப்பளவு, 426 கி.மீ., ஆக விரிவடைந்துள்ளது. பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இந்த கலெக்டர் அலுவலக வளாக கட்டடத்தில், நீதிமன்றம் உள்ளிட்ட இதர துறைகளும் உள்ளன. இதனால், இடநெருக்கடி ஏற்படுவதுடன், போராட்டங்களின்போது, போக்குவரத்து நெரிசலில் திணறுகிறது. இந்நிலையில், கலெக்டர் அலுவலகம் உள்ள இடத்தில், நீதிமன்ற அடுக்குமாடி கட்டடம் கட்டப்பட உள்ளது. இதனால், கலெக்டர் அலுவலகத்தை தென்சென்னையில், கிண்டிக்கு இடமாற்றம் செய்ய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக, கிண்டி, வெங்கடாபுரம் கிராமத்தில், 3.63 ஏக்கர் இடத்தை அரசு ஒதுக்கியுள்ளது. இதன் மதிப்பு, 92.8 கோடி ரூபாய். இந்த இடத்தில், கலெக்டர் அலுவலகம் மட்டுமின்றி, பிற மாவட்டங்களில் உள்ளதுபோல், கலெக்டர் மற்றும் மாவட்ட வருவாய் அதிகாரியின் முகாம் அலுவலகம் அமைய உள்ளது. இதற்கான இடத்தை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறைக்கு ஒதுக்கி, அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது.