வேளச்சேரியில் ரூ.10 கோடி அரசு நிலம் மீட்பு
வேளச்சேரி,அடையாறு மண்டலம், 177வது வார்டு, வேளச்சேரி, ஜெகநாதபுரம் 1வது பிரதான சாலையில், 20 சென்ட் பரப்பு உடைய மாநகராட்சி இடம் உள்ளது.இந்த இடத்தை சிலர் ஆக்கிரமித்து, தரை வாடகை விட்டு சம்பாதித்து வந்தனர். இது தொடர்பான வழக்கு, 2014ம் ஆண்டு முதல், சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்தது.இந்நிலையில், மாநகராட்சி சொந்தமான இடம் என, தீர்ப்பு வந்தது. இதையடுத்து, இடத்தை பாதுகாக்க மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து உள்ளனர்.இதற்காக, முகப்பு பகுதியில் 20 மீட்டர் நீளத்தில், தடுப்பு வேலி அமைக்கப்பட்டது. மேலும், மாநகராட்சிக்கு சொந்தமான இடம் என எச்சரிக்கை பலகை வைத்து, இடம் பாதுகாக்கப்பட்டது. மீட்கப்பட்ட நிலத்தின் மதிப்பு 10 கோடி ரூபாய் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.