வழிகாட்டி: ஆர்வம் இருந்தால் அனைத்தும் எளிது
'தினமலர் வழிகாட்டி' நிகழ்ச்சியில், ராஜலட்சுமி குழுமத்தின் இயக்குநர் அபூர்வா ஹரி பேசியதாவது: தொழில்நுட்பம் மிகவும் வேகமாக முன்னேறி வருகிறது. 'கோடிங்' படிப்பது அவசியம் என்று சொல்லிக் கொண்டு இருந்தனர். ஆனால், தற்போது தொழில்நுட்பம் வாயிலாக, கோடிங் உருவாக்க முடியும். நல்ல பொறியளராக இருக்க வேண்டும் என்றால், ஒரு தலைப்பு பற்றி முழுதும் அறிந்து கொள்ளும் ஆர்வம், மாணவர்களிடம் இருக்க வேண்டும். இயந்திரம் எப்படி செயல்படுகிறது; எந்த வகையான தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது என்று தெரிந்து கொள்ளும் ஆர்வம் இருக்க வேண்டும். நம் மனநிலை குறுகியதாவும், விருப்பங்கள் குறைவாகவும்தான் இருக்கும். ஆனால், ஆர்வமாக இருந்தால், தொழில்நுட்பம் எதுவாக இருந்தாலும், அதைப்பற்றி முழுதும் கற்றுகொள்ள முடியும். தொழில்நுட்பத்திற்கு ஏற்றார்போல், உங்களை புதுப்பித்துக்கொண்டால், நீங்களே அந்த தொழில்நுட்பத்தை வடிவமைக்க முடியும். எந்த பிரச்னை இருந்தாலும் அதற்கு தீர்வு காண வேண்டும். நல்ல பொறியாளர்கள் உருவாக்கும் பயணத்தில், பெரும்பாலான கல்லுாரிகள் தங்கள் மாணவர்களுக்கு வளங்கள் மற்றும் கருவிகள் கிடைக்க கடினமாக உழைக்கின்றன. இவ்வாறு அவர் பேசினார். ''சென்னை, பெரும்பாக்கத்தில் இருந்து, 'தினமலர்' வழிகாட்டி நிகழ்ச்சிக்கு வந்தோம். இந்த நிகழ்ச்சி எனக்கு மிகவும் உதவியாக இருக்கிறது. எந்த துறையை தேர்ந்தேடுக்க வேண்டும் என்ற குழப்பம் இருந்தது. தற்போது நிகழ்ச்சியில் பேசிய கல்வியாளர்கள் வாயிலாக, நான் தேர்ந்தேடுக்கும் துறையை குழப்பம் இன்றி தேர்வு செய்ய உள்ளேன். - துர்கா, பெரும்பாக்கம். --------------- திருவாரூரில் இருந்த வந்துள்ளேன். எனக்கு இந்நிகழ்ச்சி மிகவும் உதவியாக இருந்தது. நான் எப்படி கவுன்சிலிங் வாயிலாக, கல்லுாரிகளை தேர்வு செய்வது என்ற குழப்பத்தில் இருந்தேன். தற்போது, அதற்கான தெளிவு கிடைத்துள்ளது. இந்நிகழ்ச்சியை நடத்திய 'தினமலர்' நாளிதழுக்கு நன்றி. - முகேஷ், திருவாருர். ***