அரசு, தனியார் நிலங்களை அளவீடு செய்யுது கும்டா
சென்னை, அரசு, தனியார் நிலங்கள், பாரம்பரிய சின்னங்கள் குறித்த புதிய கணக்கெடுப்பு பணிகளை, 'கும்டா' என்ற சென்னை பெருநகர ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம் துவக்கி உள்ளது.சென்னை பெருநகரில், போக்குவரத்து திட்டங்களை ஒருங்கிணைப்பதற்காக, கும்டா துவங்கப்பட்டது. இதற்காக, தற்போதைய சென்னை பெருநகர் மட்டுமின்றி, விரிவாக்க பகுதிக்கும் சேர்த்து, போக்குவரத்து வசதிகளின் தற்போதைய நிலை, எதிர்கால தேவை குறித்த கணக்கெடுப்பை, இக்குழுமம் நடத்தி வருகிறது. இந்நிலையில், அரசு, தனியார் நிலங்கள், பாரம்பரிய சின்னங்கள், இயற்கை அமைப்புகள், செயற்கையான கட்டமைப்பு வசதிகள் குறித்த, துல்லிய தகவல்களை திரட்ட, கும்டா முடிவு செய்தது. பல்வேறு வகை போக்குவரத்து திட்டங்களை ஒருங்கிணைப்பது மற்றும் புதிய கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவதற்கு, இந்த அடிப்படை தகவல்கள் தேவை.இதற்காக, தற்போது முழுமையான கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது. இதற்கான வல்லுனர்களை தேர்வு செய்யும் பணிகள் துவங்கியுள்ளன. எதிர்காலத்தில் புதிய பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள் போன்ற திட்டங்களை செயல்படுத்த, நிலம் தேடுதல் தொடர்பான பிரச்னைகளை தவிர்க்கவே, இக்கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படுகிறது என, அதிகாரிகள் தெரிவித்தனர்.