என்.எஸ்.சி., போஸ் சாலையோர வியாபாரம் தடுக்க சிறப்பு குழு அமைக்க ஐகோர்ட் உத்தரவு
சென்னை: 'சென்னை உயர் நீதிமன்றத்தின் முன் உள்ள என்.எஸ்.சி., போஸ் சாலையில், சாலையோர வியாபாரம் நடக்கவில்லை என்பதை உறுதி செய்யவும், கண்காணிக்கவும், சிறப்பு குழுவை அமைக்க வேண்டும்' என, மாநகராட்சி கமிஷனருக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை, மேற்கு மாம்பலம் பகுதியைச் சேர்ந்த ஹேமா கணேஷ், சேகர் உள்ளிட்டோர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அவர்களது மனுக்களில், 'தெரு வியாபாரிகள் வாழ்வாதாரப் பாதுகாப்பு மற்றும் தெரு வியாபார ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ் வழங்கிய அடையாள அட்டையின் அடிப்படையில், சாலையோர வியாபாரம் செய்வதில், மாநகராட்சி அதிகாரிகள் தலையிடக்கூடாது என்ற கோரிக்கை மனுக்களை பரிசீலித்து உத்தரவிட வேண்டும்' என குறிப்பிட்டிருந்தனர். இந்த வழக்கு, நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, மாநகராட்சி தரப்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் ரவீந்திரன் ஆஜராகி, ''மாநகராட்சியின் 15 மண்டலங்களில், சாலையோரங்களில் வியாபாரம் செய்ய அனுமதி கோரி பெறப்பட்ட 2,293 மனுக்களை பரிசீலித்து, 35,588 பேருக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டு உள்ளது. இன்னும் 48 மனுக்கள் மட்டுமே பரிசீலனையில் உள்ளன,'' என்றார். இதை பதிவு செய்த நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: சென்னை மாநகராட்சியால் ஒதுக்கப்பட்ட வாகன நிறுத்தப் பகுதியில், உயர் நீதிமன்றத்துக்கு வரும் வழக்கறிஞர்கள், பொதுமக்களின் கார்கள், இருசக்கர வாகனங்கள், நீதிமன்ற வளாகத்திற்கு அருகில் உள்ள நான்கு சுற்றுச்சாலைகளிலும் நிறுத்தப்படுகின்றன. ஆனால், இப்பகுதிகள் சாலையோர வியாபாரிகளால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு உள்ளது என்பது, இந்த நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டு உள்ளது. என்.எஸ்.சி., போஸ் சாலை, சாலையோர வியாபாரிகள் இல்லாத பகுதியாக இருக்க வேண்டும் என, உயர் நீதிமன்றம் பல முறை எச்சரித்தும், உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு உள்ளன. இருப்பினும், மாநகராட்சி அதிகாரிகளின் அனுமதியுடன், இப்பகுதியில் இன்னும் சாலையோரங்களில் கடைகள் அனுமதிக்கப்படுகின்றன. இது வேதனைக்குரியது. சாலையோர வியாபாரிகள், என்.எஸ்.சி., போஸ் பெரும்பகுதியை ஆக்கிரமித்து உள்ளதால், போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்துவதுடன், இப்பகுதியில் உள்ள நிரந்தரக் கட்டடங்களில் இயங்கும் வணிக நிறுவனங்களுக்கு வருவோருக்கு பெரிதும் இடையூறாக அமைகிறது. எனவே, சாலையோரம் வியாபாரம் நடைபெறவில்லை என்பதை உறுதி செய்யவும், அவற்றை கண்காணிக்கவும், அதிகாரிகள் அடங்கிய சிறப்பு குழுவை, சென்னை மாநகராட்சி கமிஷனர் அமைக்க வேண்டும். மேலும் இந்த நான்கு சாலைகளும் வியாபாரம் செய்யக்கூடாத சாலைகளாக, இதுவரை அறிவிக்கவில்லை எனில், அறிவிப்பதற்கான நடவடிக்கைகளை, மாநகராட்சி எடுக்க வேண்டும். விசாரணை ஜன., 7ம் தேதிக்கு தள்ளிவைக்கப்படுகிறது. அன்றைய தினம், உத்தரவை அமல்படுத்தியது குறித்து, அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.