உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / முழு உடல் பரிசோதனை திட்டத்தில் இதய அடைப்பை அறியும் வசதி

முழு உடல் பரிசோதனை திட்டத்தில் இதய அடைப்பை அறியும் வசதி

சென்னை: ஓமந்துாரார் அரசு பல்நோக்கு மருத்துவமனையில், முழு உடல் பரிசோதனை திட்டத்தில், இரண்டு நிமிடத்தில் இதய அடைப்பை தெரிந்து கொள்ளும் திட்டம் செயல்பாட்டுக்கு வந்துள்ளளது. இதுகுறித்து, மருத்துவமனையின் ஒருங்கிணைப்பு அதிகாரி ஆனந்த்குமார் கூறியதாவது: ஓமந்துாரார் அரசு பல்நோக்கு மருத்துவமனையில், முழு உடல் பரிசோதனை திட்டம் செயல்படுத்தப்படுகிறது. நான்கு விதமான கட்டணத்தில், முழு உடல் பரிசோதனை செய்யப்படுகிறது. இதில், பிளாட்டினம் பிளஸ் திட்டத்தில், 4,000 ரூபாய் கட்டணத்தில், 'டிரெட்மில்' என்ற இதய அழுத்த சோதனை செய்யப்படுகிறது. உடற்பயிற்சி செய்யும்போது இதயத்தின் செயல்பாட்டை தெரிந்து கொள்ள, இப்பரிசோதனை செய்யப்படுகிறது. இப்பரிசோதனையை செய்துகொள்ள பலர் முன்வந்தாலும், உயர் ரத்த அழுத்தம் போன்ற பல காரணங்களால், அனைவருக்கும் செய்ய முடிவதில்லை. இதனால், இ.சி.ஜி., எக்கோ ஆகியவற்றுடன் இதய அடைப்பை இரண்டு நிமிடத்தில் தெரிந்து கொள்ளும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, 'சிடி கால்சியம் ஸ்கோரிங்' என்ற பரிசோதனை முறையில், ரத்தத்தை எடுத்துச் செல்லும் ரத்த நாளங்களில் அடைப்பு இருக்கிறதா என்பதை, துல்லியமாக தெரிந்து கொள்ள உதவுகிறது. அத்துடன், முழு உடற்பரிசோதனை திட்டத்தில், பிளாட்டினம் பிளஸில், 'டிரெட்மில்' முறைக்கு பதிலாக, இப்பரிசோதனையை செய்து கொள்ளலாம். ஆனால், இப்பரிசோதனை டாக்டர் பரிந்துரையின்படி மட்டுமே செய்யப்படும். இதில், ஊசி, மருந்து இல்லாமல், எளிய முறையில், இரண்டு நிமிடத்தில் பரிசோதனை முடிவுகள் கிடைக்கின்றன. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி