உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / செம்மஞ்சேரி காவல் நிலையம் இடமாற்றம் அரசிடம் அறிக்கை கேட்கிறது ஐகோர்ட்

செம்மஞ்சேரி காவல் நிலையம் இடமாற்றம் அரசிடம் அறிக்கை கேட்கிறது ஐகோர்ட்

சென்னை :நீர் நிலையில் அமைக்கப்பட்டுள்ள செம்மஞ்சேரி காவல் நிலையத்தை, வேறு இடத்துக்கு மாற்றம் செய்வது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என, தமிழக அரசுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. செம்மஞ்சேரியில், நீர் நிலையை ஆக்கிரமித்து போலீஸ் நிலையம் கட்ட தடை விதிக்கக்கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், அறப்போர் இயக்கம் சார்பில், 2019ல் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், சம்பந்தப்பட்ட இடத்தை ஆய்வு செய்து அறிக்கை அளிக்க, ஐ.ஐ.டி., பேராசிரியர்களை நியமித்தது. அவர்களும் ஆய்வு செய்து அறிக்கை அளித்தனர். நீர்நிலையில், போலீஸ் நிலையம் உள்ளிட்ட கட்டடங்கள் அமைந்து இருப்பதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த வழக்கு, தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா, நீதிபதி ஜி.அருள்முருகன் அடங்கிய அமர்வு முன், நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் வருவாய் ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதை பார்வையிட்ட நீதிபதிகள், 61 ஹெக்டேர் நிலம், மேய்க்கால் தாங்கல் சாலை என்பது, 1987ல் மேய்க்கால் சாலை என, வகை மாற்றம் செய்யப்பட்டுள்ளது. எந்த உத்தரவின்படி நிலம் வகைமாற்றம் செய்யப்பட்டது என, கேள்வி எழுப்பினர். மேலும், ஆவணங்களின் அடிப்படையில், அந்த நிலம் நீர்நிலை என்பதால், செம்மஞ்சேரி காவல் நிலையத்தை, அதே பகுதியில் வேறு இடத்துக்கு மாற்றுவது தொடர்பாக, மூன்று வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய, தமிழக அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தனர். இதற்கு முன் நடந்த விசாரணையின்போது, நீர்நிலைகளை பாதுகாக்க வேண்டிய மாநில அரசு, தன் சட்டங்களை மீறி செயல்படலாமா என, உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை