செவிலியருக்கு பாலியல் தொல்லை தந்த மருத்துவமனை ஊழியர் கைது
சென்னை, கீழ்ப்பாக்கத்தில், தனியார் மருத்துவனை பெண் செவிலியருக்கு பாலியல் தொல்லை கொடுத்த, ரத்த பரிசோதனை நிலைய ஊழியர் கைது செய்யப்பட்டார்.கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த, 23 வயது பெண், சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள, தனியார் மருத்துவமனை ஒன்றில் செவிலியராக வேலை பார்த்து வருகிறார்.நேற்று முன்தினம் மாலை பணி முடித்து, மருத்துவமனை வளாகத்தில் உள்ள, தன் அறைக்கு சென்றுள்ளார்.அப்போது, கதவை தட்டும் சத்தம் கேட்டது. தன்னுடன் வேலை பார்க்கும் செவியராக இருக்கலாம் என்று நினைத்து, கதவை திறந்துள்ளார். திடீரென உள்ளே புகுந்த மர்ம நபர், செவிலியரின் வாயை பொத்தி, பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அவரின் பிடியில் இருந்து தப்பிய செவிலியர் கூச்சலிட்டுள்ளார். அப்போது, மருத்துவமனை வளாகத்தில் இருந்தோர், மர்ம நபரை பிடித்து, கீழ்ப்பாக்கம் போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.விசாரணையில், சென்னை போரூரைச் சேர்ந்த புரூஸ்லி பூபதி, 40 என்பதும், திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருப்பதும், கோடம்பாக்கம் தனியார் மருத்துவமனையில், ரத்த பரிசோதனை பிரிவில் வேலை செய்வதும் தெரியவந்தது.அந்த மருத்துவமனையில் பணிபுரிந்த மற்றொரு செவிலியர், ஓராண்டாக புரூஸ்லி பூபதியுடன் நெருங்கி பழகி உள்ளார். திருமணமானாவர் என்று தெரிந்ததும், அவரிடம் இருந்து விலகி, கீழ்ப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில வேலைக்கு சேர்ந்துள்ளார்.அந்த பெண்ணை தேடித்தான் புரூஸ்லி பூபதி, இந்த மருத்துவமனைக்கு வந்துள்ளார். அறையில் தன்னுடன் ஏற்கனவே நெருங்கி பழகிய பெண்தான் இருக்கிறார் என, கதவை தட்டி உள்ளார். ஆனால், அந்த அறையில் வேறொரு இளம் பெண் இருந்தது தெரிந்தும், அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதையடுத்து, புரூஸ்லிபூபதி நேற்று கைது செய்யப்பட்டார்.*