உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / சென்னையில் வீடு விற்பனை 27 சதவீதம் உயர்வு

சென்னையில் வீடு விற்பனை 27 சதவீதம் உயர்வு

சென்னை,சென்னையில், கடந்த ஆண்டைவிட, நடப்பு ஆண்டில் முதல் மூன்று மாதங்களில் வீடு விற்பனை, 27 சதவீதம் அதிகரித்துள்ளதாக, இந்திய ரியல் எஸ்டேட் மேம்பாட்டாளர் சங்கங்களின் கூட்டமைப்பான 'கிரெடாய்' அமைப்பின் சென்னை பிரிவு தெரிவித்துள்ளது.கிரெடாய் அமைப்பு, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் புதிய கட்டுமான திட்டங்கள் வருகை, வீடுகள் விற்பனை குறித்து, மூன்று மாதங்களுக்கு ஒரு முறை ஆய்வு அறிக்கை வெளியிட்டு வருகிறது.வீடு விற்பனையின் போக்கு குறித்து மக்களும், கட்டுமான துறையினரும் அறியும் வகையில், இந்த அறிக்கை வெளியிடப்படுகிறது. இந்த வகையில், ஜனவரி, பிப்ரவரி, மார்ச் ஆகிய மூன்று மாதங்களில், ரியல் எஸ்டேட் துறை செயல்பாடு குறித்து, கிரெடாய் அமைப்பு நேற்று வெளியிட்ட அறிக்கை: சென்னையில், 2025ம் ஆண்டு துவக்கமே ரியல் எஸ்டேட் துறை வர்த்தகத்தில் சாதகமான தகவல்கள் வருகின்றன. வீடு விற்பனையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் கட்டுமான நிறுவனங்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது. சென்னையில், 2024ம் ஆண்டு முதல் மூன்று மாதங்களில், 2,983 வீடுகள் விற்பனையானது. இது, 2025 முதல் மூன்று மாதங்களில், 3,783 ஆக அதாவது, 27 சதவீதம் உயர்ந்துள்ளது. கடந்த, 2024ம் ஆண்டில், 7,218 வீடுகள் அடங்கிய, 78 குடியிருப்பு திட்டங்கள் ரியல் எஸ்டேட் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டன. நடப்பு ஆண்டில், 8,402 வீடுகள் அடங்கிய, 61 திட்டங்கள் பதிவாகி உள்ளன. புதிய திட்டங்கள் எண்ணிக்கை குறைந்தது போன்று தெரிந்தாலும், வீடுகள் எண்ணிக்கை அடிப்படையில், 11 சதவீதம் உயர்வு ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டு, 7,717 ஆக இருந்த கட்டி முடிக்கப்பட்டு விற்பனையாகாத வீடுகள் எண்ணிக்கை, தற்போது, 7,872 ஆக உயர்ந்துள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து, கிரெடாய் சென்னை பிரிவு தலைவர் ஏ.முகமதுஅலி கூறியதாவது: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், உள்கட்டமைப்பு சார்ந்த திட்டங்களில் முதலீடு அதிகரித்தள்ளதால், மக்கள் வீடு வாங்குவதற்கான தேவை உயர்ந்துள்ளது. வீட்டுக்கடன் வட்டி குறைப்பு, வருவமான வரம்புகள் மாற்றம் போன்ற காரணங்களால், வீடு வாங்குவதில் மக்கள் மத்தியில் ஆர்வம் அதிகரித்துள்ளது. இதனால் ஏற்பட்டுள்ள நம்பிக்கை காரணமாக, பல்வேறு கட்டுமான நிறுவனங்கள், புதிதாக அடுக்குமாடி குடியிருப்பு திட்டங்களை அறிவிக்க முன்வரலாம். இவ்வாறு அவர் கூறினார்.******


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை