எரி உலை திட்டம் கைவிடக்கோரி கொடுங்கையூரில் மனித சங்கிலி
கொடுங்கையூர்:சென்னையில் சேகரமாகும் திடக்கழிவை எரித்து அழிக்க, சென்னை மாநகராட்சி, கொடுங்கயைூரில் எரி உலை அமைக்க உள்ளது.இந்த திட்டம் சுற்றுச்சூழலையும், மக்களின் உடல் நலனையும் பாதிக்கும் எனக்கூறி, சுற்றுச்சூழல் அமைப்புக்கள் எதிர்த்து தெரிவித்து வருகின்றன.இந்நிலையில், கொடுங்கையூர் குப்பை கிடங்கு வளாகத்தில் அமைய உள்ள எரி உலை தொழிற்சாலை திட்டத்தை ரத்து செய்யக்கோரி, வடசென்னை குடியிருப்போர் நலச்சங்கங்கள் சார்பில், நேற்று மாலை மனித சங்கிலி போராட்டம் நடந்தது.கூட்டமைப்பின் தலைவர் டி.கே.சண்மும் தலைமை வகித்தார். கொடுங்கையூர் எழில் நகர், ராஜரத்தினம் நகர், எண்ணுார் நெடுஞ்சாலை, கண்ணதாசன் நகர் சந்திப்பு, மீனாம்பாள் சாலை, வியாசர்பாடி, டாக்டர் அம்பேத்கர் அரசு கலை கல்லுாரி வரை, 4 கி.மீ., துாரத்திற்கு, ஆயிரக்கணக்கானோர் மனித சங்கிலியாக நின்றனர்.எரி உலை எதிர்ப்ப பதாகைகளை ஏந்தியபடியும்; எலும்புகூடு போல வேடமிட்டும் பொதுமக்கள் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்கூட்டமைப்பின் தலைவர் டி.கே.சண்முகம் கூறியதாவது:எரிஉலை தொழிற்சாலை அமைக்க, ராம்கி நிறுவனம் டெண்டர் எடுத்துள்ளது. இந்த நிறுவனம், ஐதராபாத்தில் நடத்திய எரி உலையால், 18 ஏரிகள் நாசமடைந்துள்ளது.அதுபோன்ற சூழல் சென்னையிலும் ஏற்படும். சுவாச கோளாறுகளால் மக்கள் பாதிக்கப்படுவர். எனவே, எரி உலை திட்டத்தை கைவிட்டு, மக்கும் குப்பையை உரமாக்கும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.