உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மாநகராட்சி, நகராட்சிகள் விரிவாக்கத்தில்...அதிருப்தி- ஓட்டு வங்கி அச்சத்தால் கவுன்சிலர்கள் எதிர்ப்பு

மாநகராட்சி, நகராட்சிகள் விரிவாக்கத்தில்...அதிருப்தி- ஓட்டு வங்கி அச்சத்தால் கவுன்சிலர்கள் எதிர்ப்பு

சென்னை : சென்னை, ஆவடி மாநகராட்சி விரிவாக்கத்தால், ஓட்டு வங்கி பாதிக்கும் அச்சத்தில் கவுன்சிலர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டம், மல்லியங்குப்பம் ஊராட்சியை ஆரணி பேரூராட்சியுடன் இணைப்பதால், 100 நாள் வேலை பறிப்போகும் என எதிர்ப்பு தெரிவித்து, அக்கிராமத்தினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதே பிரச்னையால், பல்வேறு பகுதிகளில் ஓட்டு வங்கி பாதிக்கும் என, கவுன்சிலர்கள் அச்சமடைந்துள்ளனர். தாம்பரம் மாநகராட்சியில் ஊரப்பாக்கம், வண்டலுார், திருவிஞ்சேரி, அகரம்தென், சித்தலபாக்கம், பெரும்பாக்கம், நன்மங்கலம், முடிச்சூர், திரிசூலம், கோவிலம்பாக்கம் உள்ளிட்ட 18 கிராம ஊராட்சிகள் இணைக்கப்படும் என, கடந்தாண்டு வெளியிட்ட அறிவிப்பில், தமிழக அரசு தெரிவித்தது.அதேபோல், காஞ்சிபுரம் மாநகராட்சியில், கோனேரிகுப்பம், திருப்பருத்திக்குன்றம், கருப்படைத்தட்டை, ஏனாத்துார் உள்ளிட்ட 11 கிராம ஊராட்சிகள் இணைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.ஆனால், இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததனர். ஓட்டு வங்கியில் பாதிப்பு ஏற்படும் என்ற அச்சத்தில் அனைத்து கட்சிகளை சேர்ந்த கவுன்சிலர்களும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.உயர்நிலைக்குழு மற்றும் மாவட்ட கலெக்டர்களுடன் நடந்த பல்வேறு கட்ட ஆலோசனைக்குபின், இந்த பகுதிகள், அந்தந்த மாநகராட்சியுடன் இணைக்கப்படாமல் கைவிடப்பட்டுள்ளன.அந்த பகுதிகளில் வருவாய் குறைவாக இருப்பதால், மாநகராட்சிகளுடன் இணைக்கப்படவில்லை என்று சமாளிக்கப்பட்டது. அதேபோல், செங்கல்பட்டு நகராட்சியில் 15 கிராம ஊராட்சிகள்; நந்திவரம் - கூடுவாஞ்சேரி நகராட்சியில் மூன்று ஊராட்சிகள் இணைக்கப்பட இருந்தன. அவையும் இணைக்கப்படவில்லை.காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஸ்ரீபெரும்புதுார், செங்கல்பட்டு மாவட்டத்தில் மாமல்லபுரம், திருப்போரூர், திருக்கழுக்குன்றம் ஆகியவை புதிய நகராட்சியாக உருவாக்கப்படும் என தெரிவிக்கப்பட்ட நிலையில், அவையும் செயல்பாட்டிற்கு கொண்டுவரப்படவில்லை. சென்னை மாநகராட்சியுடன் அருகாமையில், புழல் ஒன்றியத்திற்கு உட்பட்ட வடகரை, அழிஞ்சிவாக்கம், தீர்த்தகரையம்பட்டு, சென்றம்பாக்கம், விளாங்காடுபாக்கம், புள்ளிலைன், கிராண்ட்லைன் ஆகிய ஊராட்சிகள் உள்ளன.திருவள்ளூர் மாவட்டத்தின் கட்டுப்பாட்டில் இந்த ஊராட்சிகள் இயங்கினாலும், ஒன்றிய அலுவலகம், சென்னை மாநகராட்சிகுட்பட்ட புழல் மத்திய சிறை அருகே இயங்கி வருகிறது.இதனால், சென்னை மாநகராட்சியுடன் இணைக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நாரவாரிக்குப்பம் நகராட்சியாக உயர்த்தப்பட்டு, அருகில் உள்ள ஊராட்சிகள் இணைக்கப்பட்டுள்ளன.அ.தி.மு.க., ஆட்சியில், புழல் ஒன்றியத்துக்குட்பட்ட வடப்பெரும்பாக்கம், தீயம்பாக்கம், கதிர்வேடு உள்ளிட்ட ஊராட்சிகள், சென்னை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டன. இந்த ஊராட்சிகளுக்கு அதிக வரி வருவாய் கிடைத்ததால், இணைப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டது.ஆனால், 'புழல் ஒன்றியத்தில் எஞ்சியுள்ள ஊராட்சிகள் புறக்கணிக்கப்பட்டு, வளர்ச்சியில் பின்தங்கி உள்ளது. இங்கு சாலைகள், தெருவிளக்கு, குடிநீர், மருத்துவ வசதிகள், பொது கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்புகள் இல்லை. திறந்தவெளி பகுதிகளில் மலம் கழிப்பது தொடர்கிறது. இந்த ஊராட்சிகளை சென்னை மாநகராட்சியுடன் இணைக்க வேண்டும்' என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக உள்ளது.சட்டசபையிலும், ஆளும்கட்சியைச் சேர்ந்த மாதவரம் தொகுதி எம்.எல்.ஏ., சுதர்சனம் இதை வலியுறுத்தி வந்தார். ஆனால், உள்ளூரில் கவுன்சிலர்கள் எதிர்ப்பால், இம்முடிவில் மாற்றம் ஏற்பட்டது. செங்குன்றம், நாரவாரிகுப்பம் பேரூராட்சியில் இந்த ஊராட்சிகள் இணைக்கப்பட்டு, நகராட்சியாக தரம் உயர்த்தப்படுவதாக, திடீரென அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது.அதேநேரத்தில் மதுரவாயல் தொகுதியில் உள்ள அடையாளம்பட்டு, வானகரம் ஆகிய ஊராட்சிகள், சென்னை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டுள்ளன.வருவாய் மற்றும் வளர்ச்சியில் பின்தங்கிய ஊராட்சிகள், ஏற்கனவே பின்தங்கியுள்ள நாரவாரிகுப்பம் பேரூராட்சியுடன் இணைக்கப்பட்டு உள்ளதால், அப்பகுதியினர் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.இது தேர்தலில் எதிரொலிக்கும் என்ற அச்சத்தில் கவுன்சிலர்கள் உள்ளனர். ஆனாலும், 100 நாள் வேலை திட்டம் உள்ளிட்ட சலுகைகள் தொடரும் என, அவர்களுக்கு சமாதானம் கூறப்பட்டுள்ளது.ஊரக வளர்ச்சி துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:அதிக வருவாய் கிடைக்கிறது என்ற காரணத்திற்காக வானகரம், அடையாளம்பட்டு ஊராட்சிகள், சென்னை மாநகராட்சியுடன் இணைக்கப்பட உள்ளன.இந்த ஊராட்சிகளில், 100 நாள் வேலை திட்டத்தை செயல்படுத்துவதற்கான சாத்தியகூறுகள் குறைந்துவிட்டது. எனவேதான், பொதுமக்கள் எதிர்ப்பு இன்றி சென்னை மாநகராட்சியுடன், இந்த ஊராட்சிகளை சேர்க்கப்பட்டுள்ளது. புழல் ஒன்றிய ஊராட்சிகளில் உள்ள, 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்களுக்கு, நகராட்சி நிர்வாக துறை வாயிலாக மாற்று வேலைவாய்ப்புகள் உருவாக்கி தரப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

கிராமவாசிகள் எதிர்ப்பு!

சோழவரம் ஒன்றியம், மல்லியங்குப்பம் ஊராட்சியில், 5,000க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். காய்கறி, பூ, கீரை வகைகள் பயிரிட்டு தொழில் செய்கின்றனர். இந்த ஊராட்சியை, அருகில் உள்ள ஆரணி பேரூராட்சியுடன் இணைக்கப்படும் என, அரசு தெரிவித்துள்ளது.இதற்கு, மல்லிங்குப்பம் கிராமவாசிகள் எதிர்ப்பு தெரிவித்து, 250க்கும் மேற்பட்டோர் நேற்று, புதுவாயல் - பெரியபாளையம் சாலையில் உள்ள ஆரணியில், மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதித்தது. தங்களது ஊராட்சியை, ஆரணி பேரூராட்சியுடன் இணைப்பதால், 100 நாள் வேலை திட்டத்தின் பயன்பெறும், 400க்கும் மேற்பட்டோரின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என கூறினர்.மேலும், நகர்ப்புற பகுதியாக மாறும்போது, சிறு, குறு விவசாயிகள் அதிகளவில் பாதிப்பிற்கு உள்ளாவர். கிராமசபை ஒப்புதல் இல்லாமல், எப்படி இணைக்கலாம். இந்த நடவடிக்கையை அரசு கைவிடவேண்டும் என்றனர். அதிகாரிகள் வந்து பேச்சு நடத்தியதை அடுத்து, அனைவரும் கலைந்து சென்றனர்.

11 ஊராட்சிகள்

நிம்மதிமாநகராட்சியைவிட ஊராட்சிக்கு வரி குறைவு என்பதால், மாநகராட்சியுடன் இணைவதை, காஞ்சிபுரத்தின் 11 ஊராட்சிகளை சேர்ந்த பலரும் விரும்பவில்லை.அதனால் அவை, மாநகராட்சியுடன் சேர்க்கப்படவில்லை. வீடு கட்டும் திட்டம், கால்நடை திட்டங்கள், வேளாண் திட்டங்கள் என பல வகையான திட்டங்களுக்கு, கிராம ஊராட்சியாக இருந்தால், மானியம் கிடைக்கும். ஊராட்சி தலைவரின் விருப்பத்திற்கு ஏற்ப, அனுமதியற்ற கட்டுமானங்கள் வரும்.மாநகராட்சியானால் வீடு, வணிக கட்டடங்கள் கட்ட அனுமதி பெற வேண்டும். ஆகையால், மாநகராட்சியுடன் இணையாத, 11 கிராம மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

பூந்தமல்லி மாநகராட்சி

மக்கள் வலியுறுத்தல்பூந்தமல்லி நகராட்சியின் 21 வார்டுகளில், 1.35 லட்சம் பேர் வசிக்கின்றனர். இதை பெருநகராட்சியாக அல்லது மாநகராட்சியாக மாற்ற வேண்டும் என, அப்பகுதியினர் எதிர்பார்த்து வந்தனர்.இந்நிலையில், ஆவடி மாநகராட்சியுடன், பூந்தமல்லி நகராட்சி மற்றும் அதை சுற்றியுள்ள ஊராட்சிகள் இணைக்கப்பட்டுள்ளது. இதற்கு, பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.அதேசமயம், பூந்தமல்லி நகராட்சியைச் சுற்றியுள்ள திருமழிசை பேரூராட்சி, செம்பரம்பாக்கம், வரதராஜபுரம், அகரமேல், மேப்பூர், சென்னீர்குப்பம், காட்டுப்பாக்கம், பாரிவாக்கம், பாணவேடுதோட்டம், நசரத்பேட்டை ஆகிய ஊராட்சிகள் மற்றும் பூந்தமல்லி அருகே உள்ள காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த மாங்காடு நகராட்சி, அதை சுற்றியுள்ள ஊராட்சிகளை இணைத்து, பூந்தமல்லியை மாநகராட்சியாக தரம் உயர்த்த, அரசு பரிசீலிக்க வேண்டும் என, வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ