உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மனைவியுடன் தகாத உறவு: நண்பரை கொன்றவருக்கு தண்டனை குறைப்பு

மனைவியுடன் தகாத உறவு: நண்பரை கொன்றவருக்கு தண்டனை குறைப்பு

சென்னை:மனைவியுடன் திருமணத்தை மீறிய உறவு வைத்திருந்த நண்பனை கொலை செய்த கணவரின் ஆயுள் தண்டனையை, 10 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையாக குறைத்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தை சேர்ந்தவர் லோகநாதன். இவர், கர்நாடக மாநிலம், பெங்களூருவில் குடும்பத்துடன் வசித்து வந்த, தன் நண்பர் ஆறுமுகத்தை பார்க்க, அவ்வவ்போது செல்வது வழக்கம். அப்போது, ஆறுமுகத்தின் மனைவியுடன், லோகநாதனுக்கு திருமணத்தை மீறிய உறவு ஏற்பட்டது. இதையறிந்த ஆறுமுகம், லோகநாதனை கண்டித்துள்ளார். பின், லோகநாதன், ஆறுமுகத்தின் மனைவியுடன், சென்னை ஆர்.ஏ.,புரத்தில் குடியேறியுள்ளார். அங்கு வந்த ஆறுமுகம், மனைவியுடன் சண்டையிட்டுள்ளார். அப்போது, தடுக்க வந்த லோகநாதனை, கத்தியால் குத்தி கொலை செய்தார்.அபிராமபுரம் போலீசார் கொலை வழக்கில், ஆறுமுகத்தை கைது செய்தனர். வழக்கை விசாரித்த சென்னை 3வது கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றம், 2018ல் ஆறுமுகத்துக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.இதை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில், ஆறுமுகம் மேல்முறையீடு செய்தார். மனுவை விசாரித்த நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், சி.குமரப்பன் அடங்கிய அமர்வு பிறப்பித்த உத்தரவு:சென்னையில் லோகநாதன் வசித்த வீட்டுக்கு, நான்கு நாட்கள் முன்தான் ஆறுமுகம் வந்துள்ளார். அனைவரும் ஒன்றாக தங்கியுள்ளனர். எவ்வித சச்சரவும் ஏற்படவில்லை. சம்பவத்தன்று இரவு, ஆறுமுகம் வீட்டில் அதிக சத்துடன் 'டிவி' பார்த்திருந்தார். மனைவி வந்து, 'டிவி' சத்தத்தை குறைத்துள்ளார்.இதில் ஏற்பட்ட தகராறில், 'டிவி ரிமோட்'டால், மனைவியை ஆறுமுகம் அடித்துள்ளார். தடுக்க வந்த லோகநாதனை, திடீரென வீட்டில் இருந்த காய்கறி வெட்டும் கத்தியால் ஆறுமுகம் குத்தியுள்ளார். திடீரென ஒருவித துாண்டுதலால் நடந்துள்ளது. கொலை செய்ய வேண்டும் என்ற எந்த திட்டமிடலும் இல்லை. ஒருவேளை திட்டமிட்டு செயலை செய்திருந்தால், இறந்து போனவர் அல்லது மனைவியை கண்மூடித்தனமாக தாக்கியிருக்கக்கூடும். அற்ப சண்டையால் இச்சம்பவம் நடந்துள்ளது.எனவே, கொலை என்பதை கொலையாகாத மரணம் விளைவிக்கும் குற்றம் ஏற்படுத்தியதாக மாற்றப்படுகிறது. கடந்த 2018 மார்ச் 9ல் விசாரணை நீதிமன்றம் விதித்த ஆயுள் தண்டனை, 10 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்படுகிறது. இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ