உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பொத்தேரியில் கூட்டம் அதிகரிப்பு கூடுதல் ரயில் இயக்க வலியுறுத்தல்

பொத்தேரியில் கூட்டம் அதிகரிப்பு கூடுதல் ரயில் இயக்க வலியுறுத்தல்

சென்னை, வெளியூர் பேருந்துகள் கிளாம்பாக்கம் வரை மட்டுமே இயக்கப்படுவதால், பொத்தேரி ரயில் நிலையத்தில் கூட்டம் அதிகரித்துள்ளது. எனவே, செங்கல்பட்டு - கடற்கரை தடத்தில், கூடுதல் மின்சார ரயில்கள் இயக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.சென்னை கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்தில் ஏற்படும் நெரிசலுக்கு தீர்வாக, 393. 71 கோடி ரூபாயில், கிளாம்பாக்கத்தில் புது பேருந்து நிலையம் கட்டப்பட்டு, 2023 டிசம்பரில் செயல்பாட்டுக்கு வந்தது. இங்கிருந்து தினமும், 1,100 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இருப்பினும், 400க்கும் மேற்பட்ட பேருந்துகள் தாம்பரம் வரை இயக்க அனுமதிக்கப்பட்டது. போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக கூறி, வெளியூர் பேருந்துகள் தாம்பரம் செல்ல, மார்ச் 4 முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது.இதனால், வெளியூரில் இருந்து திண்டிவனம், செங்கல்பட்டு நெடுஞ்சாலை வழியாக வரும் அனைத்து அரசு பேருந்துகளும், கிளாம்பாக்கம் வரை மட்டுமே இயக்கப்படுகின்றன. இதற்கிடையே, பொத்தேரி ரயில் நிலையத்தில் பயணியர் அதிக அளவில் இறங்கி, மின்சார ரயில்களில் மாறி செல்கின்றனர். இதனால், பயணியர் கூட்டம் அதிகரித்துள்ளது.இதுகுறித்து, பயணியர் சிலர் கூறியதாவது: வெளியூரில் இருந்து வரும் பயணியரில், 30 சதவீதம் பேர் மின்சார ரயில்களில் பயணம் செய்வர். தாம்பரம் ரயில் நிலையம் வரை பேருந்துகள் இயக்கும்போது, பயணியர் மாறி செல்ல வசதியாக இருந்தது. தற்போது, கிளாம்பாக்கம் வரை மட்டுமே இயக்குவதால், பொத்தேரியில் இறங்கி, மின்சார ரயில்களில் பயணிக்கின்றனர்.ஆனால், போதிய மின்சார ரயில்கள் இல்லை. சிலர் ரயில்கள் கூடுவாஞ்சேரி வரை மட்டுமே இயக்கப்படுகின்றன. பயணியர் 30 முதல் 45 நிமிடங்கள் வரை காத்திருக்க வேண்டியுள்ளது. பயணியர் வசதி கருதி, செங்கல்பட்டு - கடற்கரை தடத்தில் மின்சார ரயில்களை அதிகரிக்க வேண்டும். கிளாம்பாக்கத்தில் ரயில் நிலையம் திறக்கும் வரையாவது, இந்த தடத்தில், ரயில்களை இயக்க, தெற்கு ரயில்வே நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி