உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ஸ்மார்ட் சிட்டி நடைபாதையில் அதிகரிக்கும் ஆக்கிரமிப்பு கடைகள்

ஸ்மார்ட் சிட்டி நடைபாதையில் அதிகரிக்கும் ஆக்கிரமிப்பு கடைகள்

தி.நகர்: தி.நகர் 'ஸ்மார்ட் சிட்டி' நடைபாதையில் அதிகரிக்கும் ஆக்கிரமிப்பு கடைகள், வாரந்தோறும் போலீசாருக்கு மாமூல் வழங்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கோடம்பாக்கம் மண்டலம், 133வது வார்டு பாண்டிபஜார், தியாகராயர் சாலையில், கடந்த 2019ம் தேதி 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தின்கீழ் அகலமான நடைபாதை அமைக்கப்பட்டது. அத்துடன், இருவழிப்பாதையாக இருந்த தியாகராயர் சாலை ஒரு வழிப்பாதையாக மாற்றப்பட்டது. இந்த ஸ்மார்ட் சிட்டி நடைபாதையில், வண்ண மின் விளக்குகள், இருக்கைகள், முதியவர்கள் பயணிக்க பேட்டரி வாகனங்கள் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட்டன. அத்துடன், விடுமுறை மற்றும் வார இறுதி நாட்களில் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டு வந்தன. நாளடைவில், போதிய பராமரிப்பின்றி 'ஸ்மார்ட் சிட்டி' பொலிவிழந்தது. மேலும், நடைபாதையில், இளநீர், பூ மற்றும் பழம் என, ஆக்கிரமிப்பு கடைகள் முளைக்கத்துவங்கின. அதுமட்டுமல்லாமல், அங்குள்ள வணிக நிறுவனங்கள் தங்கள் கடையின் முகப்பை நடைபாதை வரை நீட்டியுள்ளதுடன், பெயர் பலகை உள்ளிட்டவையை நடைபாதையில் அமைத்துள்ளனர். ஆக்கிரமிப்பாளர்களால் 'கல்லா' கட்டும் மாநகராட்சி அதிகாரிகள், அவற்றை கண்டுக் கொள்ளாமல் உள்ளனர். அத்துடன், நடைபாதையில் கடை அமைத்துள்ளவர்களிடம், போலீசாரும் வாரத்திற்கு 100 ரூபாய் வசூலிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே, நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்றி, மீண்டும் 'ஸ்மார்ட் சிட்டி' நடைபாதையை மீட்டெடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ