கோவில் செல்லும் பொது பாதையில் தார் சாலை அமைக்க வலியுறுத்தல்
புழுதிவாக்கம் :பெருங்குடி மண்டலம், வார்டு 186க்கு உட்பட்டது புழுதிவாக்கம். இங்குள்ள, ஏ.ஜி.எஸ்., காலனியில், 20 தெருக்களில், 1,000க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.குடியிருப்புகள் அனைவரும் சேர்ந்து, அறக்கட்டளை துவங்கி, ஏ.ஜி.எஸ்., காலனி மூன்றாவது தெருவும், நந்தனார் தெருவும் இணையும் பகுதியில், சிவசக்தி விநாயகர் கோவில் அமைத்து, கடந்தாண்டு பிரதிஸ்டை செய்து, திருப்பணிகள் நடந்து வருகின்றன.தொடர்ந்து, கோவிலைச் சுற்றி, குறிப்பிட்ட இரு தெருக்கள் இணையும் பகுதியில், வாகனங்கள் சென்று வரவும், உற்சவ ஊர்வலத்திற்கு ஏதுவாகவும், சாலை அமைக்க முடிவு செய்யப்பட்டது.இதற்காக, கோவிலுக்கு சொந்தமான, 750 ச.அடி பரப்பில், 60 அடி நீளம், 12 அடி அகலத்தில் பாதை அமைக்கப்பட்டது.தற்போது, புழுதிவாக்கம் முழுதும் மழைநீர் வடிகால்வாய், குடிநீர் இணைப்பு, பாதாள சாக்கடை திட்டப்பணிகள் நடந்து வருவதால், பள்ளி வாகனங்கள், லாரிகள் உட்பட, அனைத்து வாகனங்களும், கோவிலுக்கு ஒதுக்கப்பட்ட பொதுப்பாதை வழியாகவே பயணிக்கின்றன.அதிக வாகனங்களின் போக்குவரத்தால், வெயில் காலத்தில் சாலையில் புழுதி பறக்கின்றது. மழைக்காலத்தில் சேற்றில் சிக்கி வாகனங்கள் விபத்துக்குள்ளாகின்றன.எனவே, கோவிலுக்கு சொந்தமான பொது பாதையை தார்ச்சாலையாக மாற்ற, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் வலியுறுத்தியுள்ளனர்.இதுகுறித்து, அப்பகுதிவாசி கவுன்சிலரிடம் கேட்ட போது, 'தனியார் சொசைட்டிக்கு சொந்தமான குறிப்பிட்ட இடத்தை, மாநகராட்சிக்கு அன்பளிப்பாக வழங்கினால், சாலை அமைத்து தரப்படும்' என்றார்.