உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / காவலர் குடியிருப்பில் அடாவடி: இன்ஸ்., சஸ்பெண்ட்

காவலர் குடியிருப்பில் அடாவடி: இன்ஸ்., சஸ்பெண்ட்

சென்னை, பொது இடத்தை ஆக்கிரமித்ததை தட்டிக்கேட்டதால், எஸ்.ஐ.,க்கு அரசு வழங்கிய வாகனங்களை சேதப்படுத்திய இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி, 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளார்.போலீசார் கூறியதாவது:சென்னை, அடையாறு போக்குவரத்து புலனாய்வு பிரிவு இன்ஸ்பெக்டராக பணிபுரிபவர் ஜெயலட்சுமி, 58. அவரின் கணவர் சவுந்தரராஜன், சென்னை புதுப்பேட்டையில் உள்ள, ஆயுதப்படையில் உதவி கமிஷனராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.இவர்கள், மயிலாப்பூர் கச்சேரி சாலையில் உள்ள, காவலர் குடியிருப்பின கீழ் தளத்தில் வசித்து வருகின்றனர்.அதே குடியிருப்பில் வசித்து வருபவர் எஸ்.ஐ., இளையராஜா, 42. அவர், சென்னை மாநகர போலீசில் பாதுகாப்பு பிரிவில் பணிபுரிகிறார்.காவலர் குடியிருப்பில் ஜெயலட்சமி ஆதிக்கம் செலுத்தி வந்துள்ளார். ஜெயலட்சுமியின் வீட்டைச்சுற்றி காலியாக உள்ள பொது இடத்தில், 1,000 சதுர அடி நிலத்தை ஆக்கிரமித்து, தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ளார். அதில், ஜெயலட்சுமியும், சவுந்தரராஜனும், தங்கள் குடும்பத்தினருக்கென வாகன நிறுத்தும் இடத்தையும் கட்டி இருப்பதாக கூறப்படுகிறது.இதன் காரணமாக, ஜெயலட்சுமி மற்றும் இளையராஜா குடும்பத்தினருக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டுள்ளது.காவலர் குடியிருப்பில் அரசு நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருப்பது பற்றி, இளையராஜா, சென்னை கிழக்கு மண்டல இணை கமிஷனர், தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி கழகத்தில் புகார் அளித்துள்ளார். சென்னை உயர் நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்து உள்ளார். இவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஜெயலட்சுமி, சவுந்தரராஜன் ஆகியோர் ஆக்கிரமிப்பு செய்திருந்த இடத்தை காலி செய்ய உத்தரவிட்டுள்ளது.இதனால், ஆத்திரமடைந்த ஜெயலட்சுமி, சவுந்தரராஜன் ஆகியோர், இளையராஜாவுக்கு அரசு வழங்கிய இரு சக்கர வாகனத்தையும், அவரின் மனைவியின் இரு சக்கர வாகனத்தையும் அடித்து நொறுக்கியுள்ளனர். அதன் இருக்கையை கத்தியால் கிழித்து சேதப்படுத்தி உள்ளனர்.அவற்றை சரி செய்து மீண்டும் அதே இடத்தில், இளையராஜா மற்றும் அவரின் மனைவி ஆகியோர் இரு சக்கர வாகனத்தை நிறுத்தி உள்ளனர்.மீண்டும் அந்த வாகனங்களை, ஜெயலட்சுமி, சவுந்தரராஜன் ஆகியோர் சேதப்படுத்தி உள்ளனர். இதுகுறித்து, மயிலாப்பூர் காவல் நிலையத்தில், இளையராஜா புகார் அளித்தார். போலீசார், ஜெயலட்சுமி மற்றும் சவுந்தரராஜன் ஆகியோர் மீது, பொது சொத்தை சேதப்படுத்துதல், கொலை மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.கிரிமினல் நடவடிக்கை காரணமாக, ஜெயலட்சுமியிடம் விசாரணை நடப்பதால், அவரை, 'சஸ்பெண்ட்' செய்து, சென்னை மாநகர போக்குவரத்து கூடுதல் கமிஷனர் சுதாகர் உத்தரவிட்டுள்ளார். ஜெயலட்சுமிக்கு வழங்கப்பட்ட அரசு கார் திரும்ப பெறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

panneer selvam
டிச 08, 2024 15:20

It is strange mindset . Inspector is staying in police quarters .Once she leaves the job , then she has to vacate that flat .If so , why to occupy extra space and quarrel with neighbours . Now she is suspected but it will be restored in a couple of weeks thanks to intervention by political masters.


Chandrasekaran K
டிச 07, 2024 09:07

எப்படி இருந்த காவல் துறை, இப்படியாயிடுச்சே?


புதிய வீடியோ