உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / சர்வதேச போதை பொருள் கடத்தல்காரர் சிக்கினார்

சர்வதேச போதை பொருள் கடத்தல்காரர் சிக்கினார்

சென்னை, போதை பொருள் கடத்தல் வழக்கில், 15 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவர், ராஜஸ்தானில் கைது செய்யப்பட்டார். மத்திய போதை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவான என்.சி.பி., சென்னை மண்டல அதிகாரிகள், கடந்த 2010 நவம்பரில், கோயம்பேடு பேருந்து நிலையத்தில், போதை பொருள் கடத்தல் கும்பலைச் சேர்ந்த மூன்று பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து, 1 கோடி ரூபாய் மதிப்புள்ள ஹெராயின் போதை பொருளை பறிமுதல் செய்தனர். தொடர் விசாரணையில் அவர்கள் இலங்கைக்கு ஹெராயின் கடத்த இருந்ததும், இதன் பின்னணியில், ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த, சர்வதேச போதை பொருள் கடத்தல் கும்பலைச் சேர்ந்த கமல்சிங், 44, இருப்பதும் தெரியவந்தது. அவர் என்.சி.பி., அதிகாரிகளின் கண்ணில் சிக்காமல் தலைமறைவானார். இதனால், கமல்சிங் மீதான வழக்கை, என்.சி.பி., அதிகாரிகள் தனியாக விசாரித்து வந்தனர். மற்ற மூன்று பேர் மீதான வழக்கு விசாரணை, சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில், போதை பொருள் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. அங்கு தகுந்த சாட்சிகளுடன் குற்றம் நிரூபிக்கப்பட்டதால், 2013ல் இரண்டு பேருக்கு தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், 4 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டப்பட்டது; ஒருவர் விடுதலை செய்யப்பட்டார். இந்நிலையில், 15 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த கமல்சிங், ராஜஸ்தான் மாநிலத்தில் பதுங்கி இருப்பதாக, என்.சி.பி., சென்னை மண்டல எஸ்.பி., அரவிந்தனுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, தனிப்படை அதிகாரிகள் ராஜஸ்தானுக்குச் சென்று கமல் சிங்கை கைது செய்து, சென்னைக்கு அழைத்து வந்து புழல் சிறையில் அடைத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை