வாரிய குடியிருப்பில் மாலை நேர டியூசன் தொண்டு நிறுவனங்களுக்கு அழைப்பு
சென்னை,:பெரும்பாக்கம் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பு வளாகத்தில், 210 பிளாக்குகளில், 26,000க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்கு, 61 பிளாக்குகளில் நலச்சங்கங்கள் செயல்படுகின்றன.பெற்றோர் கண்காணிப்பு இல்லாததால், பள்ளி செல்லா மற்றும் இடைநிற்றல் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்தது.ஏற்கனவே குற்ற சம்பவங்களில் ஈடுபடுவோர், மாணவர்களையும் திருட்டு, வழிப்பறி, கஞ்சா விற்பனை உள்ளிட்ட சம்பவங்களில் ஈடுபடுத்தியதால், மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியானது.இதனால், அனைவரும் கல்வி பயின்று, பிடித்தமான வேலைக்கு சென்றால், குற்ற சம்பவங்களை தடுக்க முடியும் என, போலீசார் நம்பினர்.இதற்காக, கடந்த மாதம், போலீசார் வீடு வீடாக சென்று கணக்கெடுத்தனர். இடைநிற்றல், பல ஆண்டுகளாக பள்ளி செல்லாதவர்கள் குறித்து விசாரித்தனர்.இதன் அடிப்படையில், நடப்பு கல்வியாண்டில், அனைவரும் படிக்கும் வகையில் நடவடிக்கை எடுத்துள்ளனர். மேலும், அவர்களுக்கு மாலை நேர இலவச டியூசன் வழங்க, தன்னார்வ அமைப்புகளுக்கு போலீசார் அழைப்பு விடுத்தனர்.இதற்கான ஆலோசனை கூட்டம், தாம்பரம் காவல் ஆணையரத்தில், கமிஷனர் அபின் தினேஷ் மோடக் தலைமையில், நேற்று முன்தினம் நடந்தது. இதில், 26 தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் பங்கேற்றன.ஒரு தொண்டு நிறுவனம், 10 பிளாக்குகளில் உள்ள மாணவ - மாணவியருக்கு மாலை நேர டியூசன் எடுக்க வேண்டும் என, போலீசார் வலியுறுத்தினர்.டியூசனுக்கான இடம், ஆசிரியர் ஊதியம், சிற்றுண்டி, நலச்சங்கங்கள் ஆதரவு குறித்து, தொண்டு நிறுவனத்தினர் கூறினர்.காவல் துறை, வாரியம், சமுதாய வளர்ச்சி பிரிவு, மாவட்ட கல்வித்துறை, சமூகநலத்துறை மற்றும் தன்னார்வலர்கள், வியாபாரிகள், இதற்கு உதவ தயாராக உள்ளனர்.பள்ளி திறந்ததும் டியூசன் எடுப்பதை உறுதி செய்ய வேண்டும். எந்த வீட்டிலும் பள்ளி செல்லாதவர்கள் இருக்கக்கூடாது என, காவல் துறை அதிகாரிகள் வலியுறுத்தினர்.