உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / குடிநீர், கழிவு நீர் இணைப்பு வழங்காமலேயே ஆவடி மாநகராட்சியில் வரி வசூல் செய்வதா? கவுன்சிலர்கள் பகிரங்க குற்றச்சாட்டு

குடிநீர், கழிவு நீர் இணைப்பு வழங்காமலேயே ஆவடி மாநகராட்சியில் வரி வசூல் செய்வதா? கவுன்சிலர்கள் பகிரங்க குற்றச்சாட்டு

ஆவடி; கழிவு நீர் இணைப்பு கொடுக்காமல், வரி வசூல் செய்ய ஆவடி மாநகராட்சி சார்பில், வீடு வீடாக 'நோட்டீஸ்' வழங்கப்பட்டு வருவதாக கவுன்சிலர்கள் குற்றம் சாட்டினர்.ஆவடி மாநகராட்சி கவுன்சிலர் கூட்டம் மேயர் ஜி.உதயகுமார் தலைமையில் நேற்று நடந்தது. இக்கூட்டத்தில், மாநகராட்சி கமிஷனர் சரண்யா மற்றும் கவுன்சிலர்கள் பங்கேற்றனர். கூட்டத்தில் 75 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தீர்மானங்கள் குறித்து நடந்த விவாதங்களில் கவுன்சிலர்கள் பேசியதாவது: ரவி, தி.மு.க., 40வது வார்டு: முத்து மாரியம்மன் கோவில் பின்புறம் திறந்தவெளி மழைநீர் வடிகால்வாய் உள்ளது. அப்பகுதியில் 100 வீடுகள், பள்ளிகள் உள்ளன.விபத்து அசம்பாவிதங்கள் ஏற்படும் முன் கால்வாயை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மூன்று மாதமாக கோரிக்கை விடுத்து வருகிறேன். ஆனால், கமிஷனர் கண்டுகொள்ளவில்லை. கமிஷனர் மீது எனக்கு நம்பிக்கை இல்லை. எனவே மேயரிடம் மனு அளிக்கிறேன் எனக் கூறி, கூட்டத்தின் நடுவே மேயரிடம் மனு அளித்தார். அதுமட்டுமல்லாமல், குடிநீர், கழிவு நீர் இணைப்பு வழங்காமலேயே, அதற்கு வரி வசூல் செய்ய வீடுவீடாக 'நோட்டீஸ்' வழங்கப்பட்டுள்ளது. பிரகாஷ், அ.தி.மு.க., 1வது வார்டு: ஒவ்வொரு மீட்டிங் முடிந்ததும், அதிகாரிகள் கூட்டத்தில் விவாதித்தது குறித்து மறந்து விடுகின்றனர். தெலுங்கு காலனியில் கழிவுநீர் சாலையில் வழிந்தோடுகிறது. இதனால், எங்கள் வார்டு, மக்கள் வாழ தகுதி இல்லாத பகுதியாக மாறி வருகிறது. இந்த ஆண்டும் எங்கள் வார்டில் வெள்ள பாதிப்பு ஏற்படும். ஆவடி மாநகராட்சியை பொறுத்தவரை மனிதர்களை விட, கொசு மற்றும் நாய்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாய்கள் பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். யாஸ்மின் பேகம், தி.மு.க., 36வது வார்டு: எங்கள் வார்டில் இதுவரை குடிநீர் இணைப்பு வழங்கவில்லை. ஆனால் வரி வசூல் செய்ய, வீடுவீடாக 'நோட்டீஸ்' வழங்கி உள்ளனர். கழிவுநீர் இணைப்பு கொடுக்காமலேயே, சாலை அமைக்கும் பணியை துவங்கக் கூடாது. மேகலா ஸ்ரீனிவாசன், காங்., 38வது வார்டு: எங்கள் வார்டில், ஐந்து இடங்களில் ஆழ்துளை கிணற்றில் அமைக்கப்பட்டுள்ள மின்சார 'பேனல் போர்டு' ஆபத்தான வகையில் உள்ளன. மழை காலத்தில், மோட்டார் சுவிட்ச் போட அதை தொட முடிவதில்லை. அதை சரிசெய்ய வேண்டும். நான் கோரிக்கை வைக்கும் பணிகள் எதுவும் உடனே நடக்காத நிலையில், நான் கேட்காமலேயே எங்கள் வார்டில் குப்பை தரம்பிரிக்கும் பயோ மைனிங் ஆலை அமைக்கும் பணி நடக்கிறது. இன்னும் வரி விதிக்கப்படாமல் பல வீடுகள் உள்ளன. அவற்றை முறையாக ஆய்வு செய்து வரி வசூல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். செல்வம், தி.மு.க., 30வது வார்டு: நான்கு ஆண்டுகளில், எங்கள் வார்டில் ஒரே ஒரு மழைநீர் வடிகால் மட்டும் அமைத்துள்ளனர். அண்ணனுார் இணைப்பு சாலை, செந்தில் நகர் உள்ளிட்ட நான்கு இடங்களில் மழைநீர் வடிகால் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்கள் பகுதியில் குடிநீர் விநியோகிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சக்திவேலன், தி.மு.க., 8வது வார்டு: பச்சையம்மன் கோவில் முதல் வெங்கடாச்சலம் நகர் ஆர்ச் வரை பிரதான சாலை சேதமடைந்துள்ளது. பல இடங்களில் சாலை குறுகலாக உள்ளன. எனவே, சாலையை விரிவாக்கம் செய்து மழைநீர் வடிகால் அமைக்க வேண்டும். கார்த்திக் காமேஷ், ம.தி.மு.க., 48வது வார்டு: அன்பு நகரில் உள்ள அங்கன்வாடி மையம், தனியார் கட்டடத்தில் இயங்கி வருகிறது. இதற்கு சொந்த கட்டடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். அன்பு நகரில் வடிகால் வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். திணறிய அதிகாரிகள் இதற்கு பதில் அளித்த அதிகாரிகள், பாதிக்கப்பட்ட மக்கள் நேரில் வந்து முறையிட்டால் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். குடிநீர், பாதாள சாக்கடை இணைப்புக்கு வரி வசூல் செய்ய திட்டமிட்டுள்ள நிலையில், அதை ரத்து செய்ய பொதுமக்கள் அலைகழிக்கப்படுவது எந்த விதத்தில் நியாயம் என, மண்டல குழு தலைவர் ராஜேந்திரன் கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளிக்க முடியாமல் அதிகாரிகள் திணறினர். நேற்றைய கூட்டத்தில், வடிகால் துார் வாருதல், வடிகால் பிரச்னை, கொசு தொல்லை, தெருநாய் பிரச்னை, குடிநீர் பிரச்னை உட்பட பல்வேறு பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்பட்டன.

பூதாகரமான பிரச்னை

ஆவடி மாநகராட்சியில் கடந்த 2008ல், குடிநீர் மற்றும் பாதாள சாக்கடை திட்டம் துவங்கப்பட்டது. ஆனால், இதுவரை அந்த பணிகள் முழுமை அடையாமல் உள்ளன. பலர் அதற்கான முன்பணம், திட்டத்திற்கான முழு கட்டணம் செலுத்தியும் இதுவரை இணைப்பு வழங்கவில்லை. இந்நிலையில், கடந்த சில நாட்களாக, ஆவடி மாநகராட்சி 48வது வார்டுகளில், ஒப்பந்த ஊழியர்கள் சிலர், வீடுவீடாக சென்று, 2022 - 2023 முதல் குடிநீர் மற்றும் பாதாள சாக்கடை இணைப்பு வரி கட்ட சொல்லி, 'நோட்டீஸ்' வழங்கி வருகின்றனர். இணைப்பு கொடுக்காமலேயே வரி வசூல் செய்ய நோட்டீஸ் வழங்கப்பட்டு வருவதால், மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதற்கான வரி வசூல் தொகை எவ்வாறு கணக்கிடப்படுகிறது என, சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்நிலையில், நேற்று நடந்த கூட்டத்தில் பெரும்பாலான கவுன்சிலர்கள், இந்த பிரச்னை குறித்து பகிரங்கமாக குற்றம் சாட்டியது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ