இவை ஆரம்பம் தான் நவ., இருக்கு கனமழை
சென்னை, ''தற்போது பெய்தது வெறும் ஆரம்பம் தான், நவம்பரில் கனமழை பெய்யும்,'' என, துணை முதல்வர் உதயநிதி பேசினார்.வடகிழக்கு பருவமழையொட்டி, மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து, துணை முதல்வர் உதயநிதி தலைமையில், தலைமை செயலகத்தில் ஆய்வு கூட்டம் நேற்று நடந்தது.இந்த கூட்டத்தில் துணை முதல்வர் உதயநிதி பேசியதாவது:சென்னையில் சமீபத்தில் பெய்த மழையில் சிறப்பாக பணியாற்றிய அனைவருக்கும் பாராட்டுகள்.தற்போது பெய்த மழை வெறும் ஆரம்பம் தான். நவம்பர் மாதத்தில் தீவிர மழைக்காலம் என, வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.அதற்கு முன், எடுக்கப்பட்ட பணிகள் குறித்து, அந்தந்த துறைகள் தீவிரப்படுத்த வேண்டும்.மாநகராட்சி பகுதிகளில் மழைநீர் தேங்கிய விபரங்கள், அந்த இடங்களில் மழைநீர் வடிய எடுத்து கொண்ட நேரம், மழைநீர் கால்வாய் வாயிலாக நீர் வடிந்து சென்ற இடங்களின் விபரங்கள், மோட்டார் பம்ப் வைத்து நீர் அகற்றப்பட்ட இடங்களின் விபரங்கள் சமர்ப்பிக்க வேண்டும்.அக்., முதல் டிச., மாதம் வரை, மழையை எதிர்கொள்ள அனைத்து முன்னேற்பாட்டு பணிகளையும் கூடுதல் கவனத்துடன், கண்காணிப்பு அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டும்.சென்ற மழையின்போது சிறப்பாக பணியாற்றி, மக்களிடம் நன்மதிப்பை பெற்றோம். எதிர்காலத்திலும், அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்றி மழை வெள்ளத்தில் இருந்து மக்களை காத்து நற்பெயர் பெற்று தர வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.
சென்னைக்கு நீங்கள் தான் தாய்
சென்னையில், கடந்த மழைக்கு சிறப்பாக பணியாற்றிய துாய்மை பணியாளர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட, 1,273 பேருக்கு, பிரியாணி விருந்துடன், நலத்திட்ட உதவிகளை துணை முதல்வர் உதயநிதி நேற்று வழங்கினார்.அப்போது அவர் பேசுகையில், ''சென்னை உங்களுக்கு குழந்தைபோல், நீங்கள் தான் சென்னைக்கு தாய். எவ்வளவு மழை பெய்தாலும் சென்னையை காப்பாற்ற நாங்கள் இருக்கிறோம். எங்களுடன் நீங்கள் இருக்க வேண்டும். புடவை, லுங்கி, ரெயின்கோட், 5 கிலோ அரசி, எண்ணெய் உள்ளிட்ட, 2,000 ரூபாய் மதிப்புள்ள பரிசு தொகை வழங்கப்பட்டுள்ளது,'' என்றார்.