காசிமேடில் களைகட்டுது கடம்பா சீசன்
காசிமேடு:காசிமேடில், கடம்பா மீன் சீசன் களைகட்டிஉள்ளது. சென்னையின் பிரதான மீன் சந்தையாக காசிமேடு உள்ளது. ஞாயிற்றுக்கிழமைகளில் அதிகாலை முதலே, இங்கு மீன் வாங்க பொதுமக்கள் குவிவர். அந்தவகையில், நேற்று முன்தினம் இரவில் பெய்ய துவங்கிய கனமழை அதிகாலை வரை நீடித்தது. இதனால், அதிகாலையில் மக்கள் கூட்டம் குறைவாக இருந்தது. காலை 5:00 மணியளவில் மழை ஓய்ந்ததால், காசிமேடு களைகட்ட துவங்கியது. பர்லா, கடம்பா உள்ளிட்ட மீன்களின் விற்பனை அமோகமாக இருந்தது. கடம்பா மீன்களை பொறுத்தவரை, ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்கள் சீசனாகும். சென்னையில் உள்ள நாட்டுப்படகு மீனவர்கள், இரண்டு நாடிகல் மைல் துாரம் வரை கடலுக்குள் சென்று, பிரத்யேக வலைகளை பயன்படுத்தி கடம்பா மீன் பிடித்து வருகின்றனர். இந்த மீன்களில், கலோரி, புரதம், கொழுப்பு, ஒமேகா - 3 மற்றும் வைட்டமின்கள் நிறைந்துள்ளன. குறைந்த கொழுப்பு, அதிக புரதம் இருப்பதால் தசை வளர்ச்சிக்கு உதவுகிறது. ஒமேகா - 3 கொழுப்பு அமிலமானது, இதய நோய் அபாயம் குறைக்கும். ரத்த சோகையை தடுக்கக் கூடிய வைட்டமின் பி - 12 இதில் நிறைந்துள்ளதால், மக்கள் விரும்பி வாங்கி செல்கின்றனர். மேலும், இதில் முள் இல்லாததால் குழந்தைகளும் விரும்பி உண்ணும் உணவாக உள்ளது. கடம்பா மீன் சந்தையில் ஒரு கிலோ, 200 முதல் 250 ரூபாய் வரை விற்பனையானது. இது தவிர, குழம்புக்கு பயன்படுத்தப்படும் சிறிய வகை மீன்களான, காரப்பொடி, கவளை, சிறிய சங்கரா உள்ளிட்ட மீன்களை, தேடி பிடித்து மீன் பிரியர்கள் வாங்கிச் சென்றனர். வஞ்சிரம், கிலோ 1,100 ரூபாய் வரை விற்பனையானது. வெள்ளை வவ்வால் மற்றும் டைகர் இறால் போன்றவை, அதிகபட்சமாக, 1,300 ரூபாய்க்கு விற்பனையானது. மீன் விலை - கிலோ வஞ்சிரம் 1,000 - 1,100 கறுப்பு வவ்வால் 800 - 900 வெள்ளை வவ்வால் 1,200 - 1,300 சங்கரா 350 - 400 கானாங்கத்தை 200 - 250 பாறை 450 - 500 கொடுவா 500 - 600 கடல் விரால் 500 - 600 கேரை 150 - 200 கடம்பா 200 - 250 இறால் 300 - 400 டைகர் இறால் 1,200 - 1,300 சீலா 500 - 600 நண்டு 250 - 300 பர்லா 200 - 250