மேலும் செய்திகள்
வீட்டின் மொட்டை மாடியில் பெண் அடித்து கொலை?
26-Feb-2026
ராமாபுரம்: ராமாபுரத்தில், பெண் அடித்துக் கொல்லப்பட்ட வழக்கில், தலைமறைவாகி திருவண்ணாமலையில் பிச்சைக்காரர் வேடத்தில் சுற்றித்திரிந்த அவரது உறவினரை போலீசார் கைது செய்தனர். ராமாபுரம், செந்தமிழ் நகர் இரண்டாவது தெருவைச் சேர்ந்தவர் புஷ்பா, 37. இவர், கருத்து வேறுபாடு காரணமாக, கணவரை பிரிந்து, மகளுடன் வாடகை வீட்டில் வசித்து வந்தார். மூன்று நாட்களுக்கு முன், வீட்டின் மொட்டை மாடியில் தலையில் காயங்களுடன் மர்மமான முறையில் புஷ்பா இறந்து கிடந்தார். இது குறித்து ராமாபுரம் போலீசார் விசாரித்தனர். இதில், புஷ்பா வீட்டிற்கு வந்து சென்ற மதுரவாயலைச் சேர்ந்த அவரது உறவினர் கார்த்திக், 34, என்பவர் மீது சந்தேகம் ஏற்பட்டது; சம்பவத்தன்று அவர் தலைமறைவானதும் தெரிய வந்தது. மொபைல் போன் சிக்னலை வைத்து, அவர் திருவண்ணாமலையில் தலைமறைவாக இருந்தது தெரிய வந்தது. அங்கு, கோவில் வளாகத்தில் பிச்சைக்காரர்களுடன் இருந்த கார்த்திக்கை, ராமாபுரம் போலீசார் கைது செய்தனர். வீட்டிற்கு அடிக்கடி வந்து சென்று உதவிகள் செய்ததால், புஷ்பாவிற்கு கார்த்திக்குடன் நெருக்கம் ஏற்பட்டுள்ளது. இதனிடையே தங்கைக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில், தன்னை சந்திப்பதை நிறுத்தி கொள்ளுமாறு கார்த்திக்கிடம் புஷ்பா கூறியுள்ளார். ஆனால், கார்த்திக் அவரது பேச்சை மீறி வந்து சென்றுள்ளார். சம்பவத்தன்று, கார்த்திக்கும் புஷ்பாவும் வீட்டின் மொட்டை மாடியில் தனிமையில் இருந்தனர். அப்போது, திருமண அழைப்பிதழில் புஷ்பாவின் கணவரின் பெயர் இடம்பெற்றிருந்தது தொடர்பாக இருவருக்கும் வாக்கு வாதம் ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த கார்த்திக், அருகில் இருந்த கல்லை எடுத்து புஷ்பாவின் தலையில் போட்டு கொன்று, நகைக்காக கொலை நடந்தது போல் காதில் இருந்த கம்மலை கழற்றி சென்றது தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
26-Feb-2026