சென்னை, செப். 11– கொளத்துார் தொகுதி த.வெ.க., – எம்.எல்.ஏ., வி.எஸ்.பாபு, 75 மூச்சுத் திணறல் காரணமாக, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார். சென்னை கொளத்துார் தொகுதியில், தி.மு.க., தலைவரும், முன்னாள் முதல்வருமான ஸ்டாலினை தோற்கடித்ததன் வாயிலாக, அத்தொகுதியின் த.வெ.க., – எம்.எல்.ஏ., வி.எஸ்.பாபு பிரபலமானார். சமீபத்தில் நடந்த சட்டசபை பட்ஜெட் கூட்டத் தொடரில் பங்கேற்றார். இந்நிலையில், மூச்சு திணறல் ஏற்பட்டு நேற்று முன்தினம், சென்னை எம்.ஜி.எம்., ஹெல்த்கேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு பல்துறை நிபுணர்கள் குழுவினர், தொடர் மற்றும் சுவாச ஆதரவு சிகிச்சையை அளித்தனர். அவரது நுரையீரலில் அதிக சளி இருப்பது கண்டறியப்பட்டு, அதற்குரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து, எம்.ஜி.எம்., ஹெல்த்கேர் மருத்துவமனை வெளியிட்ட அறிக்கை: எம்.எல்.ஏ., – வி.எஸ்.பாபுவுக்கு தகுந்த மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவரது உடல்நிலை சீராக உள்ளது. அவருக்கு அளிக்கப்படும் ஆதரவு சிகிச்சையின் வாயிலாக உடல்நிலையில் முன்னேற்றம் உள்ளது. அவர், தொடர்ந்து தீவிர கண்காணிப்பிலும், மருத்துவ மேற்பார்வையிலும் இருந்து வருகிறார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. மருத்துவமனையில் சிகிச்சை பெறும் எம்.எல்.ஏ., பாபுவிடம், முதல்வர் விஜய் மொபைல் போனில் நலம் விசாரித்தார். நிதியமைச்சர் மரிய வில்சன், நேரில் நலம் விசாரித்தார். ***