உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கொருக்குப்பேட்டை மேம்பால பணி 5 மாதத்திற்கு பின் மீண்டும் துவக்கம்

கொருக்குப்பேட்டை மேம்பால பணி 5 மாதத்திற்கு பின் மீண்டும் துவக்கம்

கொருக்குப்பேட்டை: அரைகுறையாக விடப்பட்டிருந்த கொருக்குப்பேட்டை - கொடுங்கையூர் மேம்பால பணி, ஐந்து மாதத்திற்கு பின் மீண்டும் துவக்கப்பட்டுள்ளது. கொருக்குப்பேட்டையையும், கொடுங்கையூரையும் இணைக்கும் விதமாக இருந்த ரயில்வே கேட்டை கடந்து தான், தினமும் 50,000க்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வந்தன. சரக்கு ரயில் போக்குவரத்திற்காக இந்த கேட், தினமும் 30 முறைக்கு மேல் மூடப்பட்டது. ஒவ்வொரு முறையும் அரை மணி நேரத்திற்கு வாகன ஓட்டிகள் காத்திருக்க வேண்டியிருந்தது. 40 ஆண்டு கால பிரச்னைக்கு தீர்வு காண மேம்பாலம் அமைக்க வேண்டும் என, பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, மாநில நெடுஞ்சாலை துறை நடவடிக்கை எடுத்ததை அடுத்து, கொருக்குப்பேட்டை எழில் நகர் ரயில்வே கேட் பகுதியில் 105 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேம்பாலம் அமைக்க முடிவானது. கடந்த 2023 மார்ச் மாதம், மேம்பால கட்டுமான பணி துவக்கப்பட்டது. இதில், மாநில நெடுஞ்சாலைத் துறையின் பணிகள் 90 சதவீதம் முடிந்த நிலையில், ரயில்வே சார்பில் நடக்க வேண்டிய 10 சதவீத பணிகள், ஐந்து மாதங்களாக கிடப்பில் போடப்பட்டிருந்தது. அதாவது, இரு பகுதிகளில் துாண்களை இணைக்க 'கர்டர்' எனும் கான்கிரீட் கட்டமைப்பை பொருத்துவதில், ரயில்வே நிர்வாகம் அனுமதி தர மறுத்தது. இதனால், கொருக்குப்பேட்டை மற்றும் மூலக்கொத்தளம் உள்ளிட்ட பகுதிகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதுகுறித்து நம் நாளிதழில் செப்., 20ம் தேதி, 'மேம்பால பணிக்கு அனுமதி தராமல் ரயில்வே இழுத்தடிப்பு: கொருக்குப்பேட்டை, வியாசர்பாடியில் கடும் நெரிசல்' என்ற தலைப்பில், செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக, தற்போது ரயில்வே நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. இதையடுத்து, பணிகள் துவங்கி நடக்கின்றன. இது குறித்து ஆர்.கே.நகர் எம்.எல்.ஏ., எபினேசர் கூறுகையில், ''ஐந்து மாத போராட்டத்திற்கு பின், தற்போது ரயில்வே நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. ''பணிகளை துரிதகதியில் முடித்து, வரும் டிசம்பர் முதல் வாரத்தில் மேம்பாலத்தை திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை