கொசஸ்தலை ஆற்றின் கரை உடைப்பு? சடையங்குப்பம் கிராமத்திற்கு வெள்ள அபாயம்
மணலி: கொசஸ்தலை கரை உடைக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், சடையங்குப்பம் கிராமத்திற்கு வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டம், பூண்டி நீர்த்தேக்கம் 35 அடி உயரம் கொண்டது. முழு கொள்ளளவை எட்டிய நிலையில், வினாடிக்கு, 2,000 கன அடி வீதம், உபரி நீர் இரு மதகுகள் வழியாக, கொசஸ்தலை ஆற்றில் திறந்துவிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக, கடைமடை பகுதிகளான, விச்சூர், புது நாப்பாளையம், மணலி புதுநகர், சடையங்குப்பம் ஆகிய பகுதிகளில் உள்ள கொசஸ்தலை ஆற்றில் வெள்ளநீர் கரைபுரண்டு ஓடுகிறது. சடையங்குப்பம் அருகே, கொசஸ்தலை ஆற்றின் கரை பலவீனம் காரணமாக, கரை உடைப்பு ஏற்பட்டு, வெள்ளம் வெளியேறியது. தகவலறிந்த நீர்வளத்துறை அதிகாரிகள், சம்பவ இடத்தில் முகாமிட்டு, 'பொக்லைன்' இயந்திரத்தின் உதவியுடன், கரையை மணல் கொண்டு தற்காலிகமாக மூடி வைத்துள்ளனர். இருப்பினும், அதிகப்படியான உபரி நீர், ஆற்றில் திறந்து விடப்படும் பட்சத்தில், இந்த கரையும் அடித்து செல்லப்படும். சடையங்குப்பம் கிராமம் வெள்ளத்தால் கடும் பாதிப்பை சந்திக்கும் என, அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். எச்சரித்த 'தினமலர்' இது குறித்து, சமூக ஆர்வலர் பாலசந்திரன் கூறியதாவது: மணலி புதுநகர், ஆர்.எல்.நகர் முதல் சடையங்குப்பம் மேம்பாலம் வரை துார்ந்து போன கரையும்; சில இடங்களில் கரையே இல்லாமல் இருப்பது குறித்தும், தினமலர் நாளிதழில் புகைப்படத்துடன் செய்தி வெளியிட்டு எச்சரித்தும், நீர்வளத்துறை அதிகாரிகளின் மெத்தனத்தால், சடையங்குப்பம் கிராமம், மணலி புதுநகர் தெற்கு பகுதி, வெள்ளத்தால் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.