உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருத்துவர் இல்லாததால் அவதி

ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருத்துவர் இல்லாததால் அவதி

வளசரவாக்கம், வளசரவாக்கம் மண்டல ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருத்துவர்கள் இல்லாததால், பகுதிமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.சென்னை, வளசரவாக்கம் மண்டலம், 143 முதல் 155 வரை 13 வார்டுகள் உள்ளன. இதில், நெற்குன்றம் 145 மற்றும் 148, மதுரவாயல் 144, ராமாபுரம் 155, போரூர் 153 ஆகிய வார்டுகளில், 5 ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளன. அதேபோல், 151வது வார்டு சின்ன போரூரில், நகர்ப்புற சமுதாய நல மருத்துவமனை அமைந்துள்ளது. மேலும், 13 வார்டுகளில் 6 வார்டில் சுகாதார மற்றும் ஆரோக்கிய மையங்கள் செயல்பட்டு வருகின்றன.இதில், 145வது வார்டு சக்தி நகர், 148வது வார்டு மேட்டுக்குப்பம் பிரதான சாலை மற்றும் 155வது வார்டு பஜனை கோவில் தெரு ஆகிய பகுதிகளில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில், கடந்த 15 நாட்களுக்கும் மேலாக மருத்துவர் இல்லாத நிலை உள்ளது.இதனால், இந்த மையங்களுக்கு வரும் நோயாளிகள் மிகவும் அவதிப்படுவதுடன், தனியார் மருத்துவமனைகளை தேடிச் செல்லும் நிலை உள்ளது. மேலும், 147வது வார்டில் இயங்கி வரும் சுகாதார மற்றும் ஆரோக்கிய மையத்திலும், மருத்துவர் பணியிடம் காலியாக உள்ளது. சின்ன போரூரில் உள்ள நகர்ப்புற சமுதாய நல மருத்துவமனையிலும், மருத்துவர்கள் பற்றாக்குறை உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதேபோல், சென்னை மாநகராட்சியின் பிற மண்டலங்களில் மருத்துவர்கள் பணியிடம் காலியாக உள்ளது என, சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டினர்.இதுகுறித்து 148வது வார்டு அ.ம.மு.க., கவுன்சிலர் கிரிதரன் கூறியதாவது:நெற்குன்றத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில், கடந்த 20 நாட்களாக மருத்துவர் இல்லை. இந்த வார்டில் ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்கள் அதிகம் வசிக்கின்றனர். அவர்கள் அரசு மற்றும் மாநகராட்சி மருத்துவமனைகளை சார்ந்துள்ளனர். மாநகராட்சி ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர் இல்லாததால், மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே, டாக்டரை நியமனம் செய்ய வேண்டும் என, மண்டல கூட்டத்திலும் பேசியுள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ