உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / துபாய் விமானம் மீது மீண்டும் லேசர் ஒளி

துபாய் விமானம் மீது மீண்டும் லேசர் ஒளி

சென்னை, துபாயில் இருந்து 304 பயணியருடன் புறப்பட்ட எமிரேட்ஸ் விமானம், நேற்று முன்தினம் இரவு சென்னை நோக்கி வந்து கொண்டிருந்தது.சென்னையை நெருங்கிய விமானம் தரையிறங்க தாழ்வான பகுதியில் பறக்க துவங்கியபோது, எதிர் திசையில் இருந்து பச்சை நிற லேசர் ஒளி விமானத்தின் மீது அடிக்கப்பட்டது.இதனால், நிலை குலைந்த விமானிசாதுர்யமாக செயல்பட்டு, விமானத்தை மீண்டும் உயரத்தில் பறக்கச்செய்தார். விமான நிலைய தகவல் கட்டுப்பாட்டு கோபுரத்துக்கு உடனடியாக புகார் தெரிவித்தார். இதற்கிடையே, எந்த பிரச்னையும் இல்லாமல் பத்திரமாக விமானம் தரையிறங்கியது.விமான நிலையத்தை சுற்றியுள்ள மற்ற காவல் நிலையங்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.கடந்த மே 25ம் தேதி, இதே விமானத்தின் மீது மர்ம நபர்கள் லேசர் ஒளி அடித்தனர். இப்போது மீண்டும் அதே சம்பவம் அரங்கேறியுள்ளது. இது மாதிரியான சம்பவங்கள் தொடர்வது, சென்னையில் விமான பாதுகாப்புக்கு கேள்விக்குறியாக மாறி உள்ளது.

சட்டப்படி நடவடிக்கை

போலீஸ் கமிஷனர் அருண் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:விமான நிலையம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் லேசர் விளக்குகள், அதிக ஒளி தரும் விளக்குகள் ஒளிரவும், ராட்ச பலுான்கள் பறக்கவிடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.தடையை மீறி மர்ம நபர்கள், தரையிறங்க வந்த பயணிகள் விமானத்தின் மீது லேசர் விளக்கினை ஒளிர செய்து, நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளனர். காவல் துறையின் தடையை மீறி செயல்படுவோர் மீது, சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !