உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  வளர்ப்பு நாய்களுக்கு உரிமம் கட்டாயம் மாநகராட்சி உத்தரவை எதிர்த்து வழக்கு

 வளர்ப்பு நாய்களுக்கு உரிமம் கட்டாயம் மாநகராட்சி உத்தரவை எதிர்த்து வழக்கு

சென்னை: 'வளர்ப்பு நாய்களுக்கு உரிமம் பெறுவதை கட்டாயமாக்கியதை எதிர்த்த வழக்கில், நவ., 25க்குள் மாநகராட்சி விளக்கம் அளிக்க வேண்டும்' என, சென்னை உயர் நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னையில், நாய்க்கடி சம்பவங்கள் அதிகரித்ததை தொடர்ந்து, வளர்ப்பு நாய்களுக்கு உரிமம் பெறுவதை, சென்னை மாநகராட்சி கட்டாயமாக்கி உள்ளது. இதன்படி, நவ., 24க்குள் உரிமம் பெற வேண்டும். பதிவு செய்யாத பிராணிகளை வைத்திருந்தால், 5,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை எதிர்த்து, இந்திய கால்நடைகளுக்கான மக்கள் அமைப்பு, சென்னை உயர் நீதிமன்றத்தில், மனு தாக்கல் செய்துள்ளது. மனுவில், 'தனி நபருக்கு நான்கு நாய்களுக்கான உரிமம் மட்டும் வழங்கப்படும் என, மாநகராட்சி தெரிவித்துள்ளது. இதில், கைவிடப்பட்ட, காயமடைந்த நாய்களை காப்பாற்றி, பராமரிக்கும் அமைப்புகளுக்கு விலக்களிக்க வேண்டும்' என, கூறப்பட்டுள்ளது. இந்தமனு, நீதிபதி வி.லட்சுமி நாராயணன் முன் விசாரணைக்கு வந்தது. மாநகராட்சி தரப்பில், 'சென்னையில் ஒரு லட்சம் வளர்ப்பு நாய்கள் உள்ளன. அவற்றில், 31,000 நாய்கள் பதிவு செய்யப்பட்டு உள்ளன' என, தெரிவிக்கப்பட்டது. குறுக்கிட்ட நீதிபதி, 'மீதமுள்ள 69,000 நாய்களை நவ.,24க்குள் பதிய முடியுமா' என, கேள்வி எழுப்பினார். மாநகராட்சி தரப்பில், 'ஒரு நாளைக்கு 5,000 நாய்கள் பதிவாகின்றன. உரிமம் கோரி வரும் விண்ணப்பங்களை ஆய்வு செய்து, கால அவகாசம் நீடிப்பு குறித்து முடிவெடுக்கப்படும்' என, பதில் தரப்பட்டது. இதையடுத்து, மனுதாரர் எழுப்பிய பிரச்னைகள் குறித்து, மாநகராட்சி விளக்கம் அளிக்க உத்தரவிட்ட நீதிபதி, வழக்கு விசாரணையை நவ., 25க்கு தள்ளிவைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ