உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கலங்கரை விளக்கம் - கிண்டி 10 கி.மீ., மேம்பால திட்டம்...கைவிட்டாச்சு:சிக்கல்கள் அதிகம் உள்ளதென யு டர்ன் அடித்தது அரசு

கலங்கரை விளக்கம் - கிண்டி 10 கி.மீ., மேம்பால திட்டம்...கைவிட்டாச்சு:சிக்கல்கள் அதிகம் உள்ளதென யு டர்ன் அடித்தது அரசு

சென்னையில் நெரிசலுக்கு தீர்வாக அரசால் அறிவிக்கப்பட்டு, மக்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட, கலங்கரை விளக்கம் முதல் கிண்டி வரையிலான, 10 கி.மீ., மேம்பால திட்டத்தை, தமிழக அரசு திடீரென கைவிட்டுள்ளது. சென்னையின் போக்குவரத்து நெரிசலை குறைக்க, முக்கிய வழித்தடம் மற்றும் சந்திப்புகளில் மேம்பாலங்கள் முக்கிய பங்காற்றுகின்றன. ஓ.எம்.ஆர்., - இ.சி.ஆர்., - அண்ணாசாலை மற்றும் புறநகர் பகுதிகளில் மேம்பாலங்கள் கட்டப்படுகின்றன.கிண்டியில் இருந்து தலைமை செயலகம் செல்ல அடையாறு, கிரீன்வேஸ் சாலை, கலங்கரை விளக்கம், மெரினா வழித்தடம் முக்கியமானது. இதோடு, ஓ.எம்.ஆர்., - இ.சி.ஆர்., - மேடவாக்கம் உள்ளிட்ட பகுதியில் இருந்தும் கிரீன்வேஸ் சாலை வழியாக வாகனங்கள் செல்கின்றன. இதனால், இந்த சாலை எப்போதும் பரபரப்புடன் காணப்படுகிறது.கிரீன்வேஸ் சாலையில் நீதிபதிகள், அமைச்சர்கள் குடியிருப்புகள் உள்ளதால், அவர்கள் இந்த சாலையை பயன்படுத்தி தலைமை செயலகம் செல்கின்றனர். பல நேரங்களில், இந்த சாலையில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கும். இந்த நெரிசல் அடையாறு மேம்பாலம் வரை நீடிக்கும். அந்த பகுதியை கடக்க, வாகன ஓட்டிகள் பெரிதும் திண்டாடி வருகின்றனர்.இந்த சிக்கலுக்கு தீர்வு காண, தமிழக நெடுஞ்சாலைத்துறை முயற்சி மேற்கொண்டது. இதைத் தொடர்ந்து, கிரீன்வேஸ் சாலை, சாந்தோம் உள்ளிட்ட பகுதியில் ஏற்படும் நெரிசலை தவிர்க்க, கலங்கரை விளக்கம்முதல் கிண்டி ஹால்டா சந்திப்பு வரை, 10 கி.மீ., துாரத்திற்கு மேம்பாலம் அமைக்கப்படும் என, சட்டசபையில் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் வேலு அறிவித்தார்.

மூன்று வழித்தடம்

இதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராய்ந்து அறிக்கை தயாரிக்க, 45 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டது. இதில், மூன்று வழித்தடங்கள் பணிகள் மேற்கொள்வது குறித்து ஆராயப்பட்டன.l கலங்கரை விளக்கம் சந்திப்பில் இருந்து லுாப் சாலை, பட்டினம்பாக்கம், கிரீன்வேஸ் சாலை, அடையாறு, மத்திய கைலாஷ், காந்தி மண்டபம் வழியாக முதல் வழித்தடம்l கலங்கரை விளக்கத்தில் இருந்து சாந்தோம், கிரீன்வேஸ் சாலை, அடையாறு, காந்திமண்டபம் வழியாக 2வது வழித்தடம்l கலங்கரை விளக்கம் முதல் லுாப் சாலை, பட்டினம்பாக்கம், சீனிவாசபுரம் முதல் சின்னமலை வரை, அடையாறு ஆற்றங்கரை ஓரமாக உயர்மட்ட மேம்பாலம் என, மூன்று வழித்தடங்கள் குறித்து ஆராயப்பட்டது. இதற்கான அறிக்கை தயாரிக்கப்பட்டது.

சிக்கல் என்ன?

இந்த பணிகளுக்காக, கடற்கரை ஓரம் மற்றும் அடையாறு ஆற்றங்கரையில் துாண்கள் அமைக்க வேண்டும். இதற்கு, நீர்வளத்துறை, கடலோர ஒழுங்குமுறை ஆணையம், சென்னை நநிகள் சீரமைப்பு அறைக்கட்டளை ஆகிய துறைகள் தடையின்மை சான்று பெற வேண்டும்.ஆனால், நீரோட்டத்தை பாதிக்கும் என்ற ரீதியில், துாண்கள் அமைக்க ஆய்வு நிலையிலேயே வாய்ப்பில்லை என, கைவிரித்ததாக கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில், நீதிமன்றம் வரை சென்று 'குட்டு' வாங்கும் சூழல் வரலாம் என, ஆய்வு மேற்கொண்ட அதிகாரிகள் கருத்து தெரிவித்தனர்.அடையாறு பகுதியில் மெட்ரோ ரயில் பணி நடப்பதால், அந்த வழியாக மேம்பாலம் அமைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேலும், மத்திய கைலாஷ் சந்திப்பில் மேம்பால ரயில் தண்டவாளம் குறுக்கே செல்வதால், அதற்கு மேல் மேம்பாலத்தை அமைக்கவும், மத்திய கைலாஷ் சந்திப்பில், 'எல்' வடிவ மேம்பாலம் அமைவதால், அதன் வழியாக உயர்மட்ட மேம்பாலத்தை கொண்டு செல்வதற்கான சாத்தியக்கூறு இல்லை எனவும், ஆய்வில் தெரியவந்துள்ளது. இதுபோன்று பல்வேறு சிக்கல்கள் எழுந்ததால், அமைச்சர் உத்தரவுப்படி, 10 கி.மீ., உயர்மட்ட மேம்பால திட்டம் கைவிடப்பட்டு விட்டதாக நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

சாத்தியமில்லை

த்திய கைலாஷ் சந்திப்பில் மேம்பால ரயில் தண்டவாளம் குறுக்கே செல்வதால், அதற்கு மேல் மேம்பாலத்தை அமைக்கவும், மத்திய கைலாஷ் சந்திப்பில், 'எல்' வடிவ மேம்பாலம் அமைவதால், அதன் வழியாக உயர்மட்ட மேம்பாலத்தை கொண்டு செல்வதற்கான சாத்தியக்கூறு இல்லை எனவும், ஆய்வில் தெரியவந்துள்ளது. - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை