நம்ம டாய்லெட்டிற்கு பூட்டு: பஸ் ஸ்டாண்டில் அவதி
பூந்தமல்லி, பூந்தமல்லி நகராட்சியில் அரசு பேருந்து நிலையம் அமைந்துள்ளது.இங்கிருந்து சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலுார், தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு, அரசு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.பூந்தமல்லியை சுற்றியுள்ள 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள், இந்த பேருந்து நிலையத்தை பயன்படுத்துகின்றனர். இந்த பேருந்து நிலையத்தின் உள்ளே, திறந்த வெளியில் இயற்கை உபாதைகளை பயணியர் கழிப்பதை தடுக்க, எட்டு ஆண்டுகளுக்கு முன், 'நம்ம டாய்லெட்' என்ற பெயரில் கழிப்பறைகள் அமைக்கப்பட்டன. தற்போது, இந்த கழிப்பறையை நகராட்சி நிர்வாகத்தினர், பராமரிக்காமல் மூடிவிட்டனர். இதனால், மீண்டும் திறந்த வெளியில் பயணியர் இயற்கை உபாதைகள் கழிப்பதால், பேருந்து நிலைய வளாகம் துர்நாற்றம் வீசுகிறது.காட்சிப்பொருளாக உள்ள, 'நம்ம டாய்லெட்'டை பூந்தமல்லி நகராட்சி நிர்வாகம் சீரமைத்து, பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என, பயணியர் எதிர்பார்க்கின்றனர்.