7 வாகனங்கள் மீது மோதிய சொகுசு கார் நால்வர் காயம்; போதை ஓட்டுநருக்கு காப்பு
ஆலந்துார், ஆலந்துார், கத்திப்பாரா மேம்பாலம் அருகே, ஏழு வாகனங்கள் மீது அடுத்தடுத்து பென்ஸ் கார் மோதியதில், நான்கு பேர் காயமடைந்தனர். போதையில் கார் ஓட்டி விபத்து ஏற்படுத்திய, நடிகர் பாபிசிம்ஹாவின் கார் ஓட்டுநரை, போலீசார் கைது செய்தனர்.சென்னை, பெரும்பாக்கத்தைச் சேர்ந்தவர் முத்துசாமி, 42. இவர், ஆலந்துார் மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து வீட்டிற்கு, இருசக்கர வாகனத்தில் நேற்று முன்தினம் சென்று கொண்டிருந்தார்.ஜி.எஸ்.டி., சாலை, கத்திப்பாரா மேம்பாலம் அருகே, பின்னால் வேகமாக வந்த பென்ஸ் கார், முத்துசாமி ஓட்டிய வாகனம் மீது மோதி, தறிகெட்டு ஓடியது. முன்னால் சென்று கொண்டிருந்த இரண்டு பைக், இரண்டு ஆட்டோ, இரண்டு கார் ஆகிய வாகனங்களின் மீதும் அடுத்தடுத்து மோதி விபத்து ஏற்படுத்தியது.இந்த விபத்தில் முத்துசாமி, நுாக்கம்பாளையத்தைச் சேர்ந்த சரவணன்,32, மேற்கு கே.கே.நகர் சுந்தர்ராஜ், 59, குரோம்பேட்டை ஆராதனா, 30, ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், அவர்களை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.பரங்கிமலை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணையில், விபத்து ஏற்படுத்திய கார், பிரபல நடிகர் பாபி சிம்ஹாவிற்கு சொந்தமானது என்பது தெரியவந்தது.மேலும், பாபிசிம்ஹாவின் கார் ஓட்டுநர் பெரம்பலுார் மாவட்டம், கழனிவாசல் பகுதியைச் சேர்ந்த புஷ்பராஜ், 39, போதையில் கார் ஓட்டி விபத்தை ஏற்படுத்தியதும் தெரிந்தது. ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில், புஷ்பராஜின் ரத்தத்தை பரிசோதனை செய்ததில், அவர் குடி போதையில் இருந்தது தெரிந்தது.இதையடுத்து, அவர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார், நீதிமன்றத்தில் அவரை ஆஜர்படுத்தி, நேற்று சிறையில் அடைத்தனர்.