மலேஷியா விமானத்தில் கோளாறு ஏர்போர்ட்டில் பயணியர் திணறல்
சென்னை, சென்னையில் இருந்து மலேஷியா தலைநகர் செல்லும் மலேஷியன் ஏர்லைன்ஸ் விமானம் நேற்று அதிகாலை 12:20 மணிக்கு புறப்பட தயாராக இருந்தது. இதில், 141 பேர் பயணம் செய்ய இருந்தனர். பயணியர் குடியுரிமை மற்றும் பாதுகாப்பு சோதனைகளை முடித்து விமானத்தில் ஏறினர். விமானம் வழக்கமான நேரத்தில் புறப்பட்டது. விமானம் சென்னை வான்வெளியில் பறந்து கொண்டிருந்தபோது, விமானியின் 'காக்பிட்' பகுதியில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதற்கான எச்சரிக்கை அலாரம் ஒலித்தது.சென்னை விமான நிலைய தகவல் கட்டுப்பாட்டு அறைக்கு, விமானி தகவல் கொடுத்தார். அவர்கள், விமானத்தை சென்னையில் தரையிறக்க அறிவுறுத்தினர். ஓடுபாதை பகுதியில் விமானம் தரையிறங்க ஏற்பாடு செய்யப்பட்டது. முன்னெச்சரிக்கை காரணமாக மருத்துவ, பாதுகாப்பு குழுவினர் விரைந்தனர்.பின், விமானம் எந்தவித சிக்கலுமின்றி தரையிறக்கப்பட்டது. பயணியர் பத்திரமாக கீழே இறக்கப்பட்டு, 'லாஞ்ச்' பகுதியில் தங்க வைக்கப்பட்டனர். விமான பொறியாளர்கள் குழு, விமானத்தை சரி பார்க்கும் பணியில் ஈடுபட்டது.விமானம் ரத்து செய்யப்பட்டதாக அந்நிறுவனம் அறிவித்தது. பயணியர் மாற்று வழி இல்லாமல் திணறி வருகின்றனர்.