5 ஆண்டிற்கு முன் நடந்த சம்பவத்திற்கு பழிவாங்க பெண்ணை தாக்கியவர் கைது
மதுரவாயல், தன்னிடம் தவறாக நடந்த வாலிபரை பெண் தாக்கிய சம்பவத்தில், ஐந்து ஆண்டுகளுக்குபின் பழிக்குப்பழியாக அப்பெண்ணையும் அவரது மகளையும் தாக்கியவரை போலீசார் கைது செய்தனர். மதுரவாயல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்தவர், 50 வயது பெண். இவரது கணவர் உயிரிழந்த நிலையில் மகளுடன் வசித்து வருகிறார். இவர், ஜேம்ஸ் என்பவரின் மளிகை கடையில் இருந்து, ஐந்து ஆண்டுகளுக்கு முன் மளிகை பொருட்கள் வாங்கி வந்துள்ளார். தொடர்ந்து, மாதந்தோறும் மளிகை பொருட்களை ஜேம்ஸ், அப்பெண்ணின் வீட்டிற்கு கொண்டு வந்து கொடுத்து உதவுவதாக நடித்துள்ளார். இந்த நிலையில், அவரது நடவடிக்கைகள் சரியில்லாத காரணத்தால், ஆத்திரமடைந்த அப்பெண், வீட்டிற்கு வரக் கூடாது எனக் கூறி, சத்தம் போட்டுள்ளார். மேலும், செருப்பால் அடித்துள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் மதியம் அப்பெண் மற்றும் அவரது மகள் வீட்டில் இருந்தபோது, அங்கு வந்த ஜேம்ஸ், ஐந்து ஆண்டுகளுக்கு முன் அடித்ததற்கு, அப்பெண்ணை தகாத வார்த்தைகள் பேசி, கையாலும், செருப்பாலும் தாக்கினார். தடுக்க வந்த அப்பெண்ணின் மகளையும் தாக்கினார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் கூடவே, கொலை மிரட்டல் விடுத்து தப்பி சென்றார். இது குறித்து அப்பெண் அளித்த புகாரையடுத்து, மதுரவாயல் போலீசார் தமிழ்நாடு பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிந்து, ஆலப்பாக்கத்தைச் சேர்ந்த ஜேம்ஸ், 42, என்பவரை, நேற்று கைது செய்தனர். ஐந்து ஆண்டுகளுக்கு முன் மளிகை கடை நடத்தி வந்த ஜேம்ஸ், தற்போது கார் ஓட்டுநராக பணிபுரிகிறார்.