ஜி.ஹெச்.,சில் புகுந்து மனைவியின் கள்ளக்காதலனை வெட்டியவர் கைது
கொளத்துார், செங்குன்றம், பொத்துார், செல்வகணபதி நகரைச் சேர்ந்தவர் பிரேம்குமார், 35. இவரது மனைவி கற்பகம், 30. தம்பதிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக, இருவரும் பிரிந்து வாழ்கின்றனர்.இந்த நிலையில், பெரம்பூர், பாரதி தெருவைச் சேர்ந்த அரிகிருஷ்ணன், 30, என்பவருக்கும், கற்பகத்திற்கும் கடந்த இரண்டு ஆண்டுகளாக கள்ளத்தொடர்பு இருந்துள்ளது.இந்நிலையில், நேற்று முன்தினம் கற்பகத்தின் வீட்டிற்கு மதுபோதையில் வந்த அரிகிருஷ்ணன், அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தாக்கியுள்ளார். காயமடைந்த கற்பகம், பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.தகவலறிந்து சென்ற போலீசார் கற்பகத்திடம் விசாரித்தனர். அப்போது மதுபோதையில் அங்கு வந்த அரிகிருஷ்ணனை, போலீசார் மருத்துவமனையில் இருந்து வெளியேற்றினர்.அந்நேரம், கற்பகத்தை காண மருத்துவமனை வந்த பிரேம் குமார், அங்கிருந்த அரிகிருஷ்ணனை, தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சரமாரியாக வெட்டினார்.இடது கை தோள்பட்டை, மணிக்கட்டு, வலது கை மணிக்கட்டு நெற்றி உள்ளிட்ட இடங்களில் வெட்டு காயங்களுடன், அதே மருத்துவமனையில் அரிகிருஷ்ணன் அனுமதிக்கப்பட்டார். போலீசார், பிரேம் குமாரை கைது செய்து விசாரிக்கின்றனர்.